வெள்ளி, 28 ஜூன், 2013

ஒரு பானை சோற்றிற்கு....

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய பேரழிவு பற்றிய செய்திகள் பெரும் அதிர்ச்சியையும் மன சஞ்சலத்தையும் ஏற்படுத்துகிறது.. இதோ கீழே உள்ள படத்தில் இருக்கும் மூன்றோ (அ) இரண்டோ வயது குழந்தை...
ராணுவத்தினர் அந்தப் பேரழிவு பகுதியிலிருந்து மீட்டெடுத்தனர். அந்தக் குழந்தையின் இரண்டு கால்களும் ஃபிராக்சர். தாய் தந்தையர் காணவில்லை. மருத்துவமனையில் நிதம் குறிப்பாக இரவு நேரங்களில் ”அம்மா.. அம்மா” என்று அழும் காட்சிகளை  தொலைக் காட்சி செய்தியில் காட்டினார்கள். மனம் நொறுங்கிப் போனது.. அந்த நிருபர் சொன்ன வாக்கியம் ”இதைப் போல எத்தனையோ...” என்று சொல்லி நிறுத்தினார்.. எந்தக் கல் நெஞ்சையும் கரைய வைக்கும் காட்சிகள் அவை... 

இவற்றை எங்ஙனம் புரிந்து கொள்வது.. பழுத்த ஆத்திகனின் இறை நம்பிக்கையையும் தகர்க்க வைக்கும் நிகழ்வு இது...

 இந்த நேரங்களில் மனிதம் மட்டுமே உதவ முடியும்.. ஆம்.. அனுபம் கேர்.. இந்திப் பட உலகில் குணச்சித்திர நடிகர்.. அவர் பவுண்டேஷன் மூலம் அந்தக் குழந்தைக்கு உதவ முன் வந்திருக்கிறார்.. அந்தப் பெண் வளர்ந்து படித்து முடிக்கும் வரை அதற்கான செலவை ஏற்றுக் கொள்ள முன் வந்துள்ளார்.. வாழ்க அனுபம் கேர்..Mr Anupam ji.. you really care... 
இரு கரம் கூப்பி வணங்குகிறேன்... 

திங்கள், 24 ஜூன், 2013

எதுல முதல் பாருங்க....

மிக மிக வருத்தமான செய்திகளை பகிர கஷ்டமாகத்தான் இருக்கிறது.. சாலை விபத்துகளில் இந்தியாவில் முதல் இடத்தில் இருப்பது நமது தமிழகமாம்... இந்து நாளேட்டில் இன்று (24.6.13) படிக்க நேர்ந்தது.. என்ன காரணம் என்று பட்டிய்ல் இட்டால்....

1) அபரிமிதமான வாகனங்கள்  டூ மற்றும் ஃபோர் வீலர்களின் ஆக்கிரமிப்பு
2) நல்ல சாலைகள் குறைவு
3) அப்படி இருந்தாலும் பராமரிப்பு குறைவு
4) சாலைகள் போடும் போதும் ஊழல்கள்
5) சாலைவிதிகளை மதிக்காதது
6) சாலைவிதிகள் பற்றி அறிவு குறைபாடு
எல்லாவற்றும் மேலாக
7) மது....

இந்தப் பட்டியிலில் மிக பயங்கரமான முதன்மை குற்றவாளி (prime accused) மதுதான் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் சட்டம் பாய வேண்டும்தான்.  ஆனால் நடைமுறையில் அது சரிப்பட்டு வருவதில்லை. காரணம். அந்த நபர்களின் செல்வாக்கு (அனைத்து விஷயங்களிலும்) அப்படி. சாலை விபத்தால் எத்தனை அங்க ஹீனங்கள் உயிரிழப்புகள்... கொடுமை...இதை ஒழிக்க வழி செய்ய வேண்டும்..

ஒரு டெயில் பீஸ்....

ஒரு முறை என் நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். ஒரு போக்கு வரத்துக் காவலர் எங்களை தடுத்து நிறுத்தி லைசன்சை காட்டச் சொன்னார். என் நண்பர் பேப்பர்களை தேடிக் கொண்டே  சொன்னார் ”ஒழுங்கா பேப்பர் வச்சுருக்கறவங்களை  அவசரமா போறப்ப சும்மா சும்மா தொந்தரவு பண்ணி நிறுத்திறிங்க.,, அதோ தண்ணி ஏத்திக் கிட்டுப் போறனே மீன் பாடி வண்டி.. அவன் நம்பர் ப்ளேட்டையே போட்டுக்கறதில்லை.. அத கேட்டிங்களா..”என்றார்.. நான் சற்று கலவரமானேன்.. என்ன இந்த மனுஷன் தேவையில்லாமல் ஒரு காவலரிடம் வாக்குவாதம் செய்கிறார் என்று.. ஆனால் பக்கதிலிருந்த இன்னொரு போ. காவலர் ”அவரு சொல்றது எத்தன கரட்க்டு.. விடுப்பா.. சார் நீங்க போங்க சார்.. சாரி” என்று போகச் சொல்லிவிட்டார்.. எனக்கு மிக ஆச்சரியமாக இருந்தது.. ஆனால் அதே சமயம் இதைப் போன்ற அனுமதியில்லாமல் செல்லும் வாகனங்கள் படு வேகமாக சாலையில் செல்லும் போது எரிச்சலாக இருக்கும்...


வெள்ளி, 21 ஜூன், 2013

இமயத்தில் சுனாமி

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பேய் மழை அந்த மாநிலத்தையே புரட்டிப் போட்டிருக்கிறது.. ஹரித்வார் ரிஷிகேஷ், சமோலி, ருத்ரபிராயக், கேதார்நாத், பத்ரிநாத் என்று அடித்துத் துவைத்த மழை  அதனால் ஏற்பட்ட நிலச்சரிவு சாலைகள் உடைப்பு ஆறுகளில் வெள்ளம் எத்தனையோ உயிர்ப் பலிகள் என்பவை சாதாரணமாக  நம் கற்பனைக்கு எட்டாத பேரிடர் என்பது அங்கிருந்து வரும் செய்திகள் படங்கள்  வீடியோ கிளிப்பிங்கள் ஆகியவற்றைப் பார்த்தால் புரிந்து கொள்ள முடிகிறது.. என்றோ பார்த்த ஒரு படத்தில் வசனம் ஒன்று  ஞாபகத்திற்கு வருகிறது.. ”ஒரு சம்பவம் நடந்தால் எப்படி எப்போது என்று கேட்காதே ஏன் என்று கேள். அப்போதுதான் உன்னால் பிரச்சனையை கையாள முடியும்” என்று .. உண்மைதான்.. இந்த தேசிய  பேரிடர் (national disaster) ஏன்? என்ற கேள்வி தவர்க்க முடியாததாக உள்ளது.  நேற்று (20.6.13) times nowல் இரவு 9 மணிக்கு அர்னாப் கோஸ்வாமி அலறிக் கொண்டிருந்தார்..

சில ஆண்டுகளுக்கு முன்பு CAG ஒரு அறிக்கை கொடுத்திருந்தாராம்.. இமயத்தில் மடிப்புகளில் இருக்கும் இந்த ஊர்களில் பல இடங்களில் unathorized constructions அதிகமாக இருப்பதாகவும் அதைத் தடுக்க மாநில அரசுகள் முன் வரவில்லை என்ற குற்றச்சாட்டு அவ்வறிக்கையில் பதிவாயிருக்கிறதாகவும்
படித்துக் காண்பித்தார்.  அந்த மாநிலங்களில் ஆண்ட காங்., பிஜேபி அரசுகள் அனைத்தும் அவற்றை கவனத்தில் கொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டினார். அவர் உபயோகித்த வார்த்தைகள் timber mafia unathorized constructions encroachment என்று அதற்குக் காரணம் அனைத்து கட்சியினரும்தான் என்று சாடிப் பேசினார். 

அவர் பேசியதிலிருந்து பல விஷயங்கள் புரிந்து கொள்ள முடிந்தது. அங்கு தொடர்ச்சியாக சுற்றுப் புறச் சூழல் ஆர்வலர்களின் குரல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கிறது தெரிகிறது. சுந்தர்லால் பகுகுணா போன்றவர்கள் இவ்வித ஆபத்துக்களை சொல்லிக் கொண்டே வந்திருக்கிறார்.  ஆனால் அங்கு மேற்படி வேலைகளில் பல கோடி ரூபாய் மூதலீடுகள் செய்யும்  பண முதலைகள் தொடர்ச்சியாக ஆட்சியாளர்களை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்தே தங்கள் தொழிலை நடத்தி வருகிறார்கள்.  வர்த்தகமே கிரிமினல்மயமானதிற்கான அடையாளம்தான் அது. இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது பாடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறையவே இருக்கிறது.  எங்காவது சுற்றுப் புறச் சூழலியர்கள் சில விஷயங்களைச்  சொன்னார் என்றால் சூழலியிலைப்  பற்றி  சுட்டிக் காட்டினார்கள் என்றால், அவற்றை அசட்டை செய்யும்  மனப்பாங்கு பலருக்கு (என்னையும் சேர்த்துத்தான்)  உள்ளது. இவை உடனடியாகக் களையப் பட வேண்டும். அவர்கள் பேச்சுக்கு என்று மரியாதை வருகிறதோ அப்போதுதான்
இந்தப் புவியை காக்க முடியும். யாருக்கோ எங்கோ நடக்கிறது என்று நாம் வாளாகயிருக்கலாம்.. அந்தப் பேரிடரில் மாட்டிக் கொண்டு தவிக்கும் 399 தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் (மற்றவர்களைப் பற்றி கவலையில்லை என்று சொல்லவில்லை அவர்களிடம் தமிழில் பேச முடியாது என்பதால்) குடும்பதினிரிடம் பேசிப் பாருங்கள். பிரச்சனை எந்த அளவு வீரியமிக்கது
என்பது புரியும்.

திங்கள், 17 ஜூன், 2013

எங்காத்துக்காரரும்...

இப்பொதெல்லாம் என்னைப் பார்ப்பவர்கள் கேட்பது ”இப்போ என்ன கதை எழுதிட்டு இருக்கே/கிங்க...” என்பதே..
நண்பர் எழுத்தாளர் சங்கர் அவர் தயாரிக்கும் இருவாட்சி தொகுப்பிற்குக் கதை கேட்டார். ”என்னப்பா..இது” என்கிற கதையை எழுதிக் கொடுத்தேன். அன்புடன் பிரசுரித்தார். நான் கடந்த 5 வருடங்களுக்குப் பிறகு எழுதிய ஒரு கதை அதுதான்.... 1995 முதல் 2000 வரையிலான ஒரு வித மன எழுச்சியில் எத்தனை கதைகள் எழுதினேன் என்பதே தெரியவில்லை.. உருப்படியாக 100 சிறுகதைகள் தேரும்.. ஒரு நாவல் ஒன்றும் எழுதினேன்.. 100ல் பெரும்பான்மை கதைகள் புத்தமாக வந்திருக்கிறது. 5 தொகுதிகளாக பிளஸ் ஒரு நாவல்.. ஏன் இப்பொதெல்லாம் சிறுகதைகள் அதிகமாக எழுதவில்லை என்ற கேள்விக்கான
விடை எனக்கே சரியாகத் தெரியவில்லை.. இயன்ற வரை கதைகளை டிஜிட்டல் வடிவத்தில் சேமிக்க ஆசைதான். சில கதைகளை http://badristory@blogspot.com க்குப் போய் படித்துப் பார்க்கவும். இது எனது அன்பான வேண்டுகோள்.   நான் இப்பொதெல்லாம் சிறுகதைகளை அதிகமாக எழுததாற்கு காரணங்களை அடுக்கிப் பார்க்கிறேன்.
(1) இதுவரை எழுதாத விஷயம்  ஒன்றை எழுத முயல வேண்டும்
(2) அப்படி எழுதினாலும் ஏற்கனவே எழுதியதைப் போல இருப்பது
(3) “ஆமா.. மக்கள் அப்படி படிக்கிற மாதிரி தெரியல...டிரெண்ட் மாறிப் போனதைப் போல இருக்கே“
(4) உலகம் எலக்ட்ரானிக்ஸ் வழியாகத்தான் இயங்குது.. பத்திரிகைகளே தற்போது கதைகளை குறைத்திருப்பதாக
    தோன்றுகிறது
(5) அபரிமிதமாக ஊடக (டிவி நெட்) வளர்ச்சி உ.ம் facebook twitter blogs போன்றவை

மேற்சொன்னவற்றில் அனைத்துக் காரணங்களும் எனது தற்போதைய நிலைக்குக் காரணமாக இருக்கலாம்.. சரி..   தற்போது எனது எழுத்தால் நான் பெற்ற பயன்களை பட்டியிடுகிறேன்....எத்தனை நண்பர்கள் எழுத்தாளர்கள் என் எழுத்தின் மூலம் கிடைத்தார்கள்.. மிக பிரம்மிப்பான விசயம் அதுதான்.. 96 அல்லது 97 அன்று எனது சிறுகதைகள் தினமணிக்கதிரில் அவ்வப்போது பிரசுரமாகும்.. கவிஞர் ராஜமார்த்தாண்டன் தொலைபேசியில் தினமணி அலுவலகத்திற்கு வரச் சொன்னார். பெரும் பரவசமாக இருந்தது.. இலக்கிய உலகில் கவிஞர் பெரும் புள்ளி.. அவர் என் கதைகள் பிடித்திருப்பதாகவும்
கதிரில் பிரசுரிக்கப் போவதாவும் நேரில் அலுவலகம் வரச் சொன்னபோது, எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நேரில் சந்தித்துப் பேசினேன். கனவில் நடப்பதைப் போன்று இருந்தது.  கதிர் ஆசிரியர், இதயம் ஆசிரியர், புதிய பார்வை ஆசிரியர், இலக்கிய சிந்தனை பொறுப்பாளர்கள் ஞாநி பாஸ்கர்சக்தி  பால்நிலவன்,  அமரர் ஜெயந்தன் என்று பெரும் பட்டியல் நீண்டு கொண்டிருக்கும் அந்த நாட்கள்
இனிமையானதுதான்.

சனி, 15 ஜூன், 2013

மர்ஃபி விதிகள்

நீங்கள் மர்ஃபி விதிகள் பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா..
கிட்டத்தட்ட 1000 மர்ஃபி விதிகள் இருக்கின்றன...

மனிதன் என்பவன் இமயமாகலாம்

அபூர்வ திறமை பெற்றவர்கள் உண்மையில் மிக எளிமையாக
innocent ஆக இருப்பார்கள் என்று எங்கோ படித்திருக்கிறேன்.
உண்மைதான் என்பதை விஜய் டிவி மூலம் நிருபணம் ஆகிக் கொண்டு 
வருவதை உணர்ந்தேன்.. சமீபத்தில் சூப்பர் சிங்கர் என்கிற நிகழ்ச்சியில்
இரண்டு பிரபலங்கள் கலந்து கொண்டதைப் பார்க்க நேர்ந்தது.. 
ஒன்று பி சுசீலா 
இன்னொருவர் எல் ஆர் ஈஸ்வரி
..
அவர்கள் பேசிய விதம் body language பிற கலைஞர்களை பாராட்டும்
விதம், தன்னுடைய கடந்த கால நிகழ்வுகளை நினைவுகூர்ந்தது ஆகியவை
வைத்துப் பார்க்கும் போது “சே எத்தனை வெள்ளெந்தி மனிதர்களாக இருக்கிறார்கள்“  என்பது தெரிந்தது. அடித்துச் சொல்ல முடியும் ஒரு இம்மிளவுகூட கர்வமில்லாத வீண் வறட்டு கௌரவமில்லாத பேச்சு சிரிப்பு etc etc., சாதாரணமாக ப்ளாக் எழுதினாலே (என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்) ஏதோ கொம்பு முளைத்தைப் போல எண்ணும் சாதாரண மனிதர்கள் முன்பாக இந்தப் பிறவி திறமையாளர்கள் ஒரு இமயமலையைப் போலத் தெரிகிறார்கள்.. மனிதன் என்பவன் இமயமாகலாம் என்றுதான் தோன்றியது.

திங்கள், 3 ஜூன், 2013

வலி................

மிகவும் வலியுடனும் வேதனையுடனும் இந்தப் பதிவை எழுத வேண்டியுள்ளது
சுஜாதா.. பெரும் பிம்பம்... என்னை பொருத்த வரை... 

திருமதி சுஜாதா சொன்ன 2.6.13 தினகரன் வசந்தம் இதழில்  வெளியான கருத்து என்னைப் போன்ற பல சுஜாதா வாசகர்களால் சீரணிக்க முடியாதபடிதான இருக்கும். அதே சமயம், சுஜாதாவை  எதிர்ப்பவர்களுக்கு இது ஒரு இனிப்பான விசயமாக கருத வாய்ப்புள்ளது.

திருமதியாரின் கருத்து என்பது தேவயைற்ற சர்ச்சைதான்.. மேடையில் பேசுபவர்களுத் தெரியும். ஒருவர் கருத்தையோ அல்லது ஒருவரையோ  தாக்கிப் பேசவேண்டும் என்றால், அவர் முன்பாகச் செய்யவேண்டும்.

இத்தனைக்கும் மிகவும் படித்த பாரம்பரிய  குடும்பத்தைச் சேர்ந்த திருமதியாருக்கு தெரியாத விசயமல்ல . அவர் எடுத்துச் சொன்னால் சுஜாதா காது  கொடுத்து கேட்காதவர் என்பதை நம்பவும் இயலவில்லை. ஜப்பானிய ”ரோஷாமான்” படத்தில் சொல்வதைப் போல ஒரு விசயத்திற்கு  இரண்டு கோணங்களில் பார்க்க முடியும் என்பதைப் போல. 

எப்படிப் பார்த்தாலும் வேதனையாகத்தான் இருக்கிறது

அதே சமயம் வேறு சில நினைவுகளும் என்னுள் நிழலாடுகிறது.....ஷேக்ஸ்பியர் மனைவி அவர் எழுதிக் கொண்டிருக்கும் போது மசியை அவர் தலையில் கொட்டுவார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன் பாரதியின் செல்லம்மாவும் ஒருமுறை பாரதியின் பிரிவுக்குப் பின்னர் ஒரு வானொலி பேட்டியில் கூறியதையும் நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது

சில அறிஞர்கள் வாழ்க்கையில் சில சமயங்களில்....
என்ன செய்வது...