திங்கள், 11 ஜனவரி, 2016

ஜல்லிக்கட்டுக்கு ஒரு மல்லுக் கட்டு....

அப்பப்பா.... எத்தனை பேச்சுவார்த்தைகள்... எத்தனை கோரிக்கைகள்... ஒரு வழியாக ஜல்லிக்கட்டை  மத்திய அரசு அனுமதித்து விட்டது....


எப்படியும் அனுமதிக்கும் என்பது அத்தனை அரசியல்கட்சிகளும் குரல் கொடுத்த போதே தெரிந்து விட்டது... தேர்தல் நேரம் வேறு... நிச்சயம் நடத்த அனுமதிப்பார்கள்  ... வீணாக மக்களை அரசியல் கட்சிகள் பகைத்துக் கொள்ளாது... என்பதை  என்னைப் போன்ற  சாதாரண பார்வையாளர்களாளே யூகிக்க முடிந்தது....

ஆமாம்... உண்மையில் ஜல்லிக்கட்டு என்பது ஒரு மக்கள் விளையாட்டுத்தான்... அதில் சந்தேகமில்லை... பின்னே மாடுகளை டிவிஎஸ் ஐயங்காரும் ரத்தன் டாடாவுமா  பிடிக்கிறார்கள்...

ஜல்லிக் கட்டை முற்போக்கு பிற்போக்கு என்று சில முகாம்களில் எதிர்க்கிறார்கள்... அவ்வளவு ஏன்... உச்ச நீதி மன்ற வழக்கே இன்னமும் முடிவுக்கு வரவில்லை என்கிறார் முன்னாள் நீதியரசர்  சந்துரு...

ஜல்லிக் கட்டை எதிர்ப்பவர்கள்  கூறும் கருத்து
1) காட்டுமிராண்டித்தனமான விளையாட்டு
2) மாடுகளை துன்பப்படுத்துகிறார்கள்
3) மனிதர்களுக்கு காயம் ஏற்படுகிறது. சிலர் சாகிறார்கள்
4) இந்த விளையாட்டில் சாதி உள்ளே இருக்கிறது
ஆகியவை..

இந்த விளையாட்டைப் பற்றி ஒரளவுதான் எனக்குத் தெரியும் என்றாலும். பிரச்சனையாகிவிட்டதால் பல விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ள நேரிட்டுவிட்டது

ஜல்லிக் கட்டு மஞ்சுவிரட்டு ஆகியவை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறான வகைகள் உள்ளன.  ஜல்லிக்கட்டில்  வாடிவாசலில் திறந்து விடும் காளைகளை ஒரு குறிப்பிட்ட பகுதி வரை ஒருவர் பிடித்துக் கொண்டே செல்ல வேண்டும். மஞ்சுவிரட்டில் காளையின் கழுத்தில் இருக்கும் மோதிரம் போன்றவற்றை கவர வேண்டும் என்பன போன்றவைதான் இந்த விளையாட்டில் உள்ள அம்சம்.  இவற்றை ஏறுதழுவதல் என்றும் சொல்கிறார்கள்.. மேலும் இந்த விளையாட்டில் அடக்க முடியாத காளைகள் எவை என்பதும் தெரிவு செய்யப்பட்டு அதை கொண்டு சினைக்கு உபயோகப் படுத்துகிறார்கள்... காரணம் பிறக்கப் போகும் மற்ற கால்நடைகள் ஆரோக்கியமாக இருக்கும் என்கிறார்கள்... உண்மையில் இது ஒரு வகை விஞ்ஞான பார்வைதான்...  மேலும் மஞ்சுவிரட்டைத்  தடை செய்புவர்கள் பின்னணியில் ஜெர்மனியின் ஜெர்சி வகை கால்நடையை இங்கே கொண்டு வரத் துடிக்கும் சர்வ தேச சதி இருப்பதாக குற்றம் சாட்டி பல யூ டியூப் வீடியோக்கள் இணைய உலகில் வலம் வருகிறது... 

ஆனால் காய்தல் உவத்தலன்றி பார்த்தால்
1) காட்டு மிராண்டி விளையாட்டு என்பது  மேல்தட்டு ஆளும் வர்க்கப் பார்வை - காரணம் எந்த காலத்திலும் உழைக்கும் மக்களை ஏற்காத பார்வை.. 
2) மாடுகளை இதில் யாரும் துன்பப் படுத்தியது போலத் தெரியவில்லை... மாறாக வலுவான காளை எது என்ற இனம் காணும் அம்சம்தான் உள்ளது.. இப்படிப் பேசுவபவர்கள் உணவிற்காக மாட்டை கொல்வதை தடை செய்ய முடியுமா...? இல்லை மாட்டு வண்டியை பயன் படுத்தாமல்தான் இருப்பார்களா....?  ஸ்பெயின் நாட்டில் காளைகளை ஈட்டி கொன்று அனைவர் முன்னிலையில் குத்திச் சாய்கிறார்களே... இதை விட காட்டுமிராண்டித்தனம் வேறு எங்காவது உண்டா... ஒரு வேளை கனவான்கள் பார்க்கிறார்கள் என்பதால் அது நாகரீமாகிவிடுமா என்ன...?
3)  மனிதர்களுக்கு காயம் ஏற்படத்தான் செய்கிறது... ஆனால் இதைப் போன்ற எந்த விளையாட்டிலும்தான்  காயம் என்பது தவிர்க்க முடியாது... 
4) விளையாட்டில் சாதி இருக்கிறது... இருக்கலாம்தான்... இந்தியால் எந்த விஷயத்தில் தான் சாதி யில்லை... ஆக அதையெல்லாம் ஒழித்து நாம் ஜல்லிக் கட்டுக்கு வரலாம்...

ஆக  ஜல்லிக் கட்டு என்பது உழைக்கும் மக்கள் விளையாட்டுதான் என்பது தெளிவாகத் தெரிகிறது... ஏசி அறையில் அமர்ந்து கொண்டு சாதாரண  சாமானிய மக்கள்  எப்படி நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும் என்று கூறும் சிலரின் பாடங்களை கேட்பதைப் பார்த்தால்தான் வேறு விதமாகத் தோன்றுகிறது...

2 கருத்துகள் :

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

எல்லா விளையாட்டிலும் ஆபத்துக்கள் உண்டு.எந்த விளையாட்டையும் தடை போட்டு தடுத்து நிறுத்துவது சரியன்று. விதிமுறைகள் வகுக்கப் பட்டுள்ளன. அதை சரியாக பின்பற்றுவதை உறுதி செய்தால் போதுமானது.

silanerangalil sila karuththukkal சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முரளிதரன் சார்....