சனி, 28 செப்டம்பர், 2013

நான்சென்ஸ்

 தலைப்பின் வார்த்தையைச் சொன்னவர் திருவாளர் ராகுல் காந்தி அவர்கள்,  காரணம்.. ஊழல் அரசியல்வாதிகள்   தண்டனை பெற்றதும் பதவியிழக்க வேண்டும் என்கிற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அவசரமாக  அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டி அவசரச்சட்டத்தை நிறைவேற்றினார்கள். அதை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கும் அனுப்பிவைத்தார்கள்.

குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்குப்போன அவசரச்சட்டத்தை பா.ஜ.க உள்ளிட்ட ஒரு சில எதிர்க்கட்சிகளும், காங்கிரசிலேயே சிலரும் எதிர்த்து வந்த நிலையில் காங்கிரசின் அஜய் மக்கான் 27.9.13 அன்று செய்தியாளர் கூட்டத்தில் சட்டத்தை ஆதரித்துப் பேசினார்.. ராகுல் வந்து டமால் என்று சட்டத்தை கிழித்தெறி தூக்கிப் போடு என்று சண்டமாருதம் செய்ய அடுத்த நிமிடங்களில் அஜய் மக்கான் ”அதானே.. சட்டம் மோசம்..” என்று அந்தர்பல்டி அடிப்பதை டிவியில் மாற்றி மாற்றிக் காட்டினார்கள்.. பாவம்.. அவர் என்ன செய்வார்……

டிவி பத்திரிகை வலையுலகம் என்று அரசியல்வாதிகளை கிழிகிழி என்று கிழித்தாகிவிட்டது.. இங்குதான் எனக்கு ஒரு கருத்து வேறுபாடு உள்ளது..

அரசியல்வாதி என்றால் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்  காரணம் அரசியல்வாதிகள் ஓட்டுப் பிச்சை கேட்பவர்கள்.. பதவியிழக்கச் சொல்லலாம்.. திரைப்படத்தில் கேவலமாகக் காட்டலாம்… அப்படியிருந்தும் அவர்கள் நம் வீட்டுக்கு வந்து தலையை சொறிந்து ஓட்டுக் கேட்பார்கள்..

ஆனால் அக்கிரமம் செய்யும் அதிகாரிகள், பண முதலைகள் சட்டத்தை வளைக்கும் மாஃபியாக்கள் இவர்களை யார் என்ன செய்யமுடியும் என்கிற கேள்வி மட்டும் எப்போதும் தொக்கி நிற்கிறது..


இதற்கு என்ன அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும்?

விழா நாயகர்கள்

சமீபத்தில் சென்னையில் இந்திய சினிமா நூற்றாண்டு விழா நடைபெற்றது. அதைப் பற்றி பல செய்திகள் நாளேடுகளில் வார இதழ்களில் டிவி என்று பலரும் பல விசயங்களைச் சொல்லிவிட்டார்கள்.. உண்மைத் தமிழன் என்கிற சரவணன் நேரடியாக அந்த விழாவிற்குச் சென்று தன் கருத்தைச் சொல்லியிருக்கிறார்.
பார்க்க http://www.truetamilan.com/2013/09/1.html

மேலும் கலைஞர் இதைப் பற்றிக் கூறும் போது "இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் ரஜினி,கமல், இளையராஜா உள்ளிட்ட மூத்த கலைஞர்கள் கூப்பிட்டு அவமானப்படுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட  நிலையில்  நல்லவேளை என்னை கூப்பிடவில்லை, என் தன்மானம் காப்பாற்றப்பட்டது" என்று  கருத்து கூறியிருக்கிறார்,

இவையெல்லாம் நமக்குச் சொல்வது என்ன... திரையுலகில் சற்று வெளிச்சம் தன் மேல் பட்டவுடன்   கலைஞர்கள் உடனே செய்ய விரும்புவது அரசியல்..  மார்க்கெட் உள்ளவரை சினிமா.. பின்பு அரசியல் என்று தாவ எப்போதுமே தயாராக இருப்பார்கள்.. தமிழ் தெலுங்கு திரையுலகினர் அரசியலுக்கு வருவது மிக அதிகமாகத் தெரிகிறது. அரசியலிலும் தலைமை குணம் கொண்ட வழி நடத்திச் செல்லும தலைவர்கள் பற்றாகுறை வெற்றிடம் திகழ்கிறது.. அதனால் குறைந்த பட்சம் மக்களிடம் செல்வாக்குள்ள திரையுலகினர் அதுவும் ஹீரோக்களை அரசியலில் இறக்குமதி செய்யும் பாணி தமிழ்நாட்டில் இருக்கிறது.. ஏற்கனவே உள்ள அரசியலில் திரைப்பட பிண்ணனி உள்ளவர்கள்  இதை ஒரு தொழில(?) போட்டியாக நினைக்கிறார்கள் அதன் வெளிப்பாடுதான் இது என்று தோன்றுகிறது. 
அது சரி விஜய் ஒரு ஓரத்தில் நல்ல பிள்ளையாக உட்கார்ந்திருந்தாராம். பேச அழைத்த போது .. ”ஒரு நடிகை நாடாள முடியும் என்பதை அம்மா...”  என்று ஏதோ சொன்னாராம்.. 

சனி, 14 செப்டம்பர், 2013

இனி நிர்பயம் தான்….?

டெல்லி மாணவி பாலியல் வண்கொடுமை மற்றும் படுகொலை செய்த மாபாவிகளுக்கு தூக்கு….

சட்டத்தை பாராட்ட வேண்டும்.. மேல்முறையீடுகளில் எத்தனை வழக்குகள்எதிரிக்கு சாதாகமாகின்றன. தெரிந்த விஷயம்தான். வழமையாக மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்க்கிறார்கள்…. தூக்கு தண்டனையால் என்ன பயன் என்று பல புள்ளி  விவரங்களைத் தருகிறார்கள்.. அதைக் காணும் போது மனம் தடுமாறுகிறது…  ஒரு தொலைக் காட்சி விவாதத்தில் பங்கேற்ற மனித உரிமை ஆர்வலர்  (வழக்கறிஞர்) கூறினார்….”புத்தர் காந்தி பிறந்த மண் இது.. ” , என்று வாதிட்டார்…  அதெல்லாம் சரிதான்… ஆனால்

• மன்னிப்பு வழங்கினால் மட்டும் இந்த மனித மிருகங்கள் திருந்திவிடுமா?
• நிலவும் முதலாளித்துவ அமைப்பில் வேலை நிறுத்தமே சட்ட விரோதம் எனும் போது, இதைப் போன்ற அயோக்கியத்தனத்தை ஆளும் வர்க்கம் புத்த ஞான பார்வை பார்க்குமா…?
• வளர்ந்து வரும் நவ நாகரீக சமூகம் ஆண்களை மட்டுமன்றி பெண்களையும் மேலும் உழைக்க பல விஷயங்களை, நவீனத்தைக் கற்றுத் தேற வலியுறுத்துகிறது.. இச்சூழலில் பெண்களை வெளியே வந்துதான் தீர வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறார்கள். அவர்களின் மீதும் அவர்களின் உழைப்பு முன்னேற்றத்தின் மீதும் பொறமை கொண்ட எதிர் பாலினம் அவர்களை முடக்க எண்ணுகிறது.. அதன் வெளிப்பாடுதான் இவ்வித கேலி கிண்டல் அதிக பட்ச வன்முறை ஆகியவை.. இவற்றை வேரோடும் வேரடி மண்ணோடும் புதைக்க  வேண்டிய தருணத்தில் உள்ளோம்.. அதனால் இதனினும் கடுமையான சட்டங்கள் தேவை..

ஆக மனித உரிமை ஆர்வலர்கள் வாதத்தை இவ்வித மனித மிருகங்களின் விஷயத்தில் ஏற்ற என் மனம் மறுக்கிறது..

குடிபுறங் காத்துஓம்பிக் குற்றங்கடிதல்

வடுவன்று வேந்தன் தொழில் 

திங்கள், 9 செப்டம்பர், 2013

காதல்

8/9/13 அன்று நீயா நானா நிகழ்ச்சியில் காதல் திருமணத்தைப் பற்றி ஒரு விவாதம் என்பதால் அதைப் பார்க்க நேர்ந்தது.. தற்கால சூழலில் அது ஒரு முக்கியமான விவாதப் பொருளாகி விட்டது.  நிகழ்ச்சியில் பலர் பேசியது ஏற்புடைத்தாக இல்லை. இருவர் தரப்பும்.... நம் நாட்டில் எந்த விஷயமும் சர்ச்சையாகவே உள்ளது. மனுஷ்யபுத்திரன் இயக்குனர் கரு பழனியப்பன் இருவரும் முன்னர் ஏதோ பிரச்சனையில் பிரச்சனையானதைப் (?) போல சண்டைப் போட்டுக் கொண்டார்கள், 

இவற்றுள் மணிகண்டன் நாலு வார்த்தை பேசினாலும் நச்சென்று பேசினார், அது தான் இந்த விவகாரத்தில் highlight….  அப்படி என்ன மணிகண்டன் சொன்னார் என்று கேட்கிறீர்களா….? ” நமது நாட்டில் எந்த ஒரு பிரச்சனை என்றாலும் அதைத் தீர்க்க எந்த ஒரு social institutions  இல்லை … இது மிகப்  பெரிய குறை…”

ஆம் அவர் சொன்னது எத்தனை அர்த்தபுஷ்டியான கருத்து.  இஸ்லாத்தில்  அவர்கள் பிரச்சனைகளை ஜமாத் என்கிற அமைப்பு  தீர்க்க  முயல்கிறது..  அதைப் போல இந்து அமைப்பில் ஏதும் இல்லை… குடும்பம் என்கிற அமைப்புதான் அத்தனையையும் தீர்க்க முயலுகிறது…  அதன் வரம்பு அதன் ஜனநாயகம் என்பதெல்லாம் சர்ச்சைக்குரியது… இதைப் பற்றிய ஒரு வெளிப்படையான விவாதம் தேவை…

சனி, 7 செப்டம்பர், 2013

என்ன கொடுமை சரவணன்....

சில செய்திகள் நாட்டு நடப்புகள் எனக்குக் கோபம் சிரிப்பு ஆச்சர்யம் போன்ற உணர்வுகளை கலந்து கட்டித் தருகிறது..  நான் தெரிந்து கொண்ட அவைகள் சில
(1) நமது நாட்டில் வங்கிப் பணத்தை கடன் மூலமாக திருப்பி செலத்தாத சில தொழிலதிபர்கள்  பாக்கி வைத்திருக்கும் தொகை 5 லட்சம் கோடி என்று சிபிஐ அதிகாரி சின்கா  சமீபத்தில் தெரிவித்துள்ளார். அன்றாடம் நாளேடுகளில் பர்சனல் லோன் வீட்டுக் கடன் ஆகியவற்றை நிலுவை வைத்துள்ள சாமானிய நடுத்தர மக்களின் பெயர்களை பல பேப்பர்களில் கட்டம் போட்டு அந்தந்த வங்கிகள் வெளியிடுகின்றன.  மேற்படி வங்கிகளை நாமம் போட்ட முதலாளிகள் யார்  என்பதே தெரியாமல் போகிறது. மேல் நடவடிக்கைகள் என்ன எடுத்தார்கள் என்பதும் மர்மமாக  போகிறது.. ஒரு வேளை கோடிக் கணக்கில் ஏமாற்றினால் அது தவறுயில்லை லட்சக்கணக்கில் ஏமாற்றினால்தான் தவறு போலும்..  போரில் லட்சக்கணக்கான பேர்களை கொன்றால், அது போர்க் குற்றம்.  அதற்கு தண்டனை கிடையாது அதே போல் யாராவது ஒருவனை அடித்தால்  போதும் அது குற்றவழக்காகி விடுகிறதே அதைப் போல என்று நாம் மேற்படி செய்தியை நினைத்துக் கொள்ள வேண்டும் போலும்
(2) ஆசாராம் அல்லது அஸ்ராம் அல்லது அசரம் சாமியாரை ஒரு வழியாக கைது செய்து விட்டார்கள் அவரிடம் பல பரிசோதனை செய்தார்களாம் (potency test ) அத்துணைக்கும் சாமி ஒத்துழைத்தாராம்.. சந்தோசம்.. அப்படியே குற்றத்தை.....
(3) சீனாவிடம் ஒரு அங்குல நிலத்தைக் கூட நாம் இழக்க வில்லை என்கிறார் அமைச்சர் அந்தோணி. TIMESNOW தொலைக் காட்சியில் சீன எல்லையை ஒட்டிய அருணாச்சலபிரதேசத்தில் சீன சீருடையினர் அநியாயமாக எல்லைக் கடந்து ஓடுவதை காட்டினார்கள்.. அட தேவுடா...
(4) பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களைப் பார்த்தால் நமது நாடு பெண்களுக்கு பாதுகாப்பானதுதானா என்ற சந்தேகமே வந்து விடுகிறது
(5) சமீபத்தில் ஒரு செய்தி- தமிழ்நாட்டுக் கல்லூரி மாணவர்களுக்கு dress code தேவை என்கிற சட்டம் வருமாம்.. எந்தக் கோவில் மீதும் சத்தியம் செய்து கூறுகிறேன். . இது தேவையற்றது என்று.. 

திங்கள், 2 செப்டம்பர், 2013

எங்கே செல்லும் இந்தப் பாதை

டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு பற்றி செய்திகள் தாங்கி வராத நாளேடுகள் டிவிக்கள் தற்போது சுத்தமாக இல்லை என்றே சொல்லலாம்.. சரி.. டாலர் எத்தனை ரூபாய் ஆனால் நமக்கு என்ன என்று நாம் வாளாயிருக்க முடியாது. நிச்சயமாக நம்மை பாதிக்கும்.. இப்படிச் சொன்னவுடன் அதெப்படி என்று சில நண்பர்கள் உறவினர்கள் கேட்கிறார்கள். எளிமையாக புரியும் படி சொன்னால்..

1) நம் நாடு  வர்த்தகத்திற்காக எப்போதோ உலக பொருளாதாரத்துடன் இணைத்துக் கொண்டு விட்டது

(2) வர்ததகம் மட்டுமல்ல வேலை வாய்ப்பிற்கும், படிப்பிற்காகவும் வெளிநாடுகளில் உள்ள இந்தியர் அனேகம்

(3) நமது அத்தனை பரிவர்த்தனைகளும் அமெரிக்க டாலரில்தான் நடைபெறுகிறது

(4) பெட்ரோல் டீசல் வர்த்தகம் எல்லாம் டாலரில்தான்

(5) நமது நடப்பு கணக்கு பற்றாக்குறை நாளாக நாளாக அதிகமாகிக் கொண்டிருக்கிறது

அதென்ன நடப்பு கணக்கு பற்றாக்குறை...? நாம் ஏற்றுமதி செய்கிறோம் அதிலும் நாம் குறிப்பிடும் பண மதிப்பு டாலரில்.. அதே போல் இறக்குமதியும் அப்படியே...

இந்தச் சூழலில் இறக்குமதி செய்ய அதிகமாக டாலர் கொடுத்து வாங்குகிறோம்..ஏற்றுமதி செய்யும் போது நமக்கு வரும் டாலர் பணம் இறக்குமதிக்குத் தருவதைவிட குறைவாக இருப்பதால் நாம் டாலரை இழக்க வேண்டியிருக்கிறது. தினமணியில் குருமூர்த்தி தொடர் கட்டுரை எழுதுகிறார் அதில் அவர் இந்தியா ஒரளவு தாக்கு பிடிக்க முடியவதற்குக் காரணம், வெளிநாட்டில் பணிபுரிவோர் அனுப்பும் பணமும் ஒருவகையில் நம்மை பெரும் பிரச்சனையிலிருந்து காப்பாற்றியுள்ளதாகக் கூறுகிறார். இதன் காரணமாக நாம் சந்திக்கும் உடனே பிரச்சனை பெட்ரோல் டீசல் காஸ் விலை உயர்வு. அதன் தொடர்ச்சியாக வரும் இதர பிரச்சனைகள்.. உடனடி தீர்வு அவசியம். இல்லையேல் சமூக கொந்தளிப்புகள் அதிமாகும்..

என்ன செய்யப் போகிறார்கள் ஆள்பவர்கள்?