திங்கள், 18 மே, 2015

புறம்போக்கும் பொது உடைமையும்...

பொது உடைமைதான் என்ன?“ என்பது பற்றி அரிச்சுவடி தெரியாதவர்கள் இந்தப் படத்தைப்  பார்த்ததால் நல்ல விறுவிறுப்பா ஜெயில் ப்ரேக் பத்தி சொல்லியிருக்காங்க....” என்று சொல்லிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விடுவார்கள்... ஆனால் எனக்கு பொது உடைமை பற்றி  அரிச்சுவடி வரை தெரியும் என்பதால் அப்படி முடித்துக் கொள்ள விரும்பவில்லை..

முதலில் எனக்குத் தலைப்பு புரியவில்லை... பொதுஉடைமையை நக்கல் செய்வது போல அமைந்திருக்கிறது.. எல்லா புறம்போக்கு நிலமும் பொதுஉடைமைதான் ...
ஒரு வேளை அதுதான் தலைப்பா...?


போராளிகளின் திட்டம் தவிடு பொடியாகிறது..  அதனால் அவர் கடல்கடந்து போவ்தாக ஒரு காட்சி வருகிறது... இந்தியாவை விட்டே தப்பிக்கிறாரா...?
ஒருவேளை போராளிகள் வெறும் சாகசவாதிகள் என்கிறாரா...?

மெக்காலே என்கிற பாத்திரப் பெயர் புரிகிறது... ஆனால் அந்த மெக்காலே கல்வி கற்ற போலீஸ்காரன்தான் ஜெயிக்கிறான்.. அவன் திட்டம்தான் துல்லியமாக இருக்கிறது...
ஒருவேளை மெக்காலே கல்விதான் சிறந்தது என்கிறாரா ஜனநாதன்...?


மொத்தத்தில் விறுவிறுப்பான குழப்பம்தான்....


வியாழன், 14 மே, 2015

உத்தம கமல் = வில்லன்...?

அனைவரும் எழுதிய பிறகு தாமதமாக எழுத வேண்டியிருக்கிறது...  இருந்தும் படத்தைப் பற்றிய ஒரே  வரியில் சொல்ல வேண்டும் என்றால்

உத்தமவில்லன் மைனஸ் கமல் =  படம் ஒரு அழகோவியம் 

இந்த படத்திற்கு வில்லனாக அமைந்ததே கமல் என்கிற மாபெரும் personalityதான்... அவருக்கு எந்தப் பாத்திரமும் அனாயசம் என்றாலும் மனோரஞ்சன் மேல் அனுதாபம் வராததற்குக் காரணம் பாத்திரத்தை ஒரு மெகா ஸ்டார் பாத்திரமாக பார்க்காமல் கமலாகப்  பார்ப்பதுதான்... ஒரு வேளை வேறு சிலர் அப்படிப் பார்க்காமல் போகலாம்,,... என்னால் இயலவில்லை... காரணம் அந்தப் பாத்திரமே கமல் சாயலாக முற்போக்குப் பேசுவது etc etc.,

மற்றபடி, சமீபகால இளம் இயக்குனர்கள் சிந்தனையார்கள் எடுக்கும் off-beat வகையில் அதற்கு சற்றும் சளைக்காமல் கமல் என்கிற படைப்பாளி இந்தப் படைப்பைத் தந்திருக்கிறார்... 

உண்மையில் கமலுக்குப் போட்டியே மைனா மெட்ராஸ் கோலிசோடா ஜிகர்தண்டா போன்ற சமகாலப்  படைப்புகள்தான்...


அந்த வகையில் கமல் என்கிற படைப்பாளியின் வெற்றியே உத்தமவில்லன்....

செவ்வாய், 12 மே, 2015

அந்த பத்து சதம்.......

தீர்ப்பின் மைய்யக்கருத்தே இதுதான்....
வருவாய்க்கு அதிகமாக ஜெயாவிற்கு ரூ.2,82,36,812 மதிப்புடைய சொத்துக்களே உள்ளன. வருவாய்க்கு அதிகமான சொத்துக்களின் சதவீதம் 8.12%. இது ஒப்பிடுகையில் மிகச்சிறிய தொகை என்று ஆவணங்களை ஆய்வு செய்ததில் கோர்ட் முடிவுக்கு வந்ததாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது...( ஒரு முதலமைச்சர் தன் 5 ஆண்டு கால ஆட்சியில் கிட்டதட்ட 2.82 கோடி அளவுக்கு தன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது எப்படி என்பது நீதிமன்றத்தின்  வரம்புக்கு அப்பாற்பட்டதா என்பதை விளக்கவில்லை)

அதற்கு நீதி மன்றம் காட்டும் ஆதாரம் ::::
கிருஷ்ணாநந்த் அக்னிஹோத்ரியின்  வழக்கு ஒன்று
ஆந்திர மாநில அரசு தனது சுற்றறிக்கை ஒன்றில் வருவாய்க்கு அதிகமாக 20% வரை சொத்துக்கள் வைத்திருப்பது அனுமதிக்கக் கூடியதே என்பது இர்ண்டாது  ஜெ க்கு சாதகமாவுள்ளது

ரொம்ப சரி...

இதே கருணை சிறையில் வாடும் மாருதி தொழிலாளர்களுக்கும் கிடைக்க வேண்டும்  மேலும்   வழக்காடினால்  கிடைத்திருக்கும்  தண்டனைக் காடிலும் அதிக ஆண்டுகள் சிறையில் வாடும் 1 லட்ததிற்க்கும் அதிகமான  UNDERTRAILS க்கு  நீதி கிடைக்கவேண்டும்



இதை அரசு செய்யுமா..?
                                                  =============
                                                 காமெடி டயம்

  நேற்று தந்தி டிவியில் பேசிய  பண்ருட்டி ராமச்சந்திரன் அதிமுக வுக்குப்  பேசினாரா இல்லை நடுநிலையாக பேசினாரா என்று பெரும் காமெடி.....

 கடந்த ஆறு மாதம் அரசு செயல்படவில்லை என்கிறார்...   10 சதம் வருமானம் அப்படித்தான் கூட குறைய வரும் என்கிறார் .. திமுக சார்பில் பேசிய அப்பாவு அந்த அக்ரி  கிருஷ்ணமூர்த்தி  மேட்டரே ஒரு  உள் குத்து  அது பண்ருட்டி சாருக்குத் தெரியும் என்ற  போது ,  பேசாமல் சிரிக்கிறார். 

அவர் அதிமுகதானே இருக்கிறார்..?

வெள்ளி, 8 மே, 2015

இரு வேறு உலகத்து இயற்கை.....

அய்யன் வள்ளுவன் என்றோ எழுதினான் இந்தக்  குறளை... 
இரு வேறு உலகத்து இயற்கை. திரு வேறு 
தெள்ளிய ராதலும் வேறு

ஆனால் தற்போது எழுதினால் சற்று மாற்றி எழுதுவான்...  பணம் வேறு பணமில்லாதவர்கள் வேறு என்று... அவ்வளவுதான்

மீண்டும் சல்மான்கான்....

வெறுத்துப் போய்விட்டது... இதை எழுதாமலும் இருக்க முடியவில்லை.. சல்மான் ஒரு பாருக்குச் சென்றார்..செல்லட்டும்.. வயிறு முட்ட குடித்தார் குடிக்கட்டும்.. அவரிடம் பணமுள்ளது... கோடி கோடியாக சம்பாதிக்கிறார்.. சம்பாதிக்கட்டும்.. அதான் கொட்டிக் கொடுக்க ஆட்கள்  இருக்கிறார்கள்... 

ஆனால் அப்படியே குடித்துவிட்டு காரை எடுத்துக் கொண்டு ஏழை பராரியின்
மேல் ஏற்றி அவரைக் கொன்று ஒருவர் காலை ஒடித்து...  இதை எப்படி ஏற்க முடியும்?

சரி .. நம் நீதிமன்றம் 13 வருடங்கள் நீதியை வரவழைக்க எடுத்துக் கொண்டது..
காரணம்... இழுத்தடிப்பு... சாட்சிகள் மிரட்டல்.... அந்த பிளாட்பார வாசிகள் செத்ததே காரால் இல்லை... காரை கிரேன் எடுத்த போது அது மோதி இறந்தார்கள் என்று நீதிமன்றத்தை குழப்பி,   சல்மான் கோடிஸ்வரர்.. பல நற்காரியங்கள் புரிந்து நாட்டுக்கு நல்லது செய்தவர், அதனால் அவர் மீது கருணை காட்ட வேண்டும் என்று கெஞ்சி, இறுதியில் சல்மான் காரே ஓட்டவில்லை அவர்  டிரைவர்தான் ஓட்டினார் என்று டிரைவரை ஓத்துக் கொள்ள வைத்து...  என்ன செய்தும், ஒரு வழியாக அறிஞர் அண்ணா சொன்னதைப் போல இருட்டறையில் இருந்த நீதியை அந்த செசன்ஸ்  நீதியரசர் சரியாக வெளிக் கொணர்ந்து, வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு சொல்ல, ஒரு வழியாக நீதி வென்றது என்றால்...

முதலில் 2 நாள்கள் ஜாமீன் வாங்கி ,  தற்போது உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டை செய்ய... அதை ஏற்றுக் கொண்ட உயர்நீதி மன்றம் , தீர்ப்பு வரும்வரை தண்டனையை நிறுத்திவேறு வைத்திருக்கிறது...

குற்றவாளி என்று நிருபிக்க 13 வருடங்கள்.. ஆனால் ஜாமீன் கொடுக்க 2 நாட்கள் மட்டுமா...

சரி அடுத்த கதை...

உத்திரப் பிரதேச மாநிலத்தில் ஒரு போஸ்ட்மேன்... மணியார்டர் பணத்தைக் கையாடல் செய்துவிட்டாராம்........எத்தனை ரூபாய் தெரியுமா? ரூ 50 /-......  (?)  அவரை  நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்ததாம். அதை எதிர்த்து அவர் வழக்காட அந்த வழக்கு கிட்டத்தட்ட 350 முறைகள் விசாரணைக்கு வந்து முடிய கிட்டத்தட்ட 29 வருடங்கள் ஆகியதாம்.. இறுதியில் அவர் குற்றமற்றவர் என்றதாம் நீதிமன்றம்..

அதற்குள் அந்த ஆள் நொடிந்து போய்விட்டாராம்.. வழக்கு இருந்ததால் அவருக்கு வேறு எங்கும் வேலைக்கும் செல்ல முடியவில்லையாம்...

அய்யா...அறிஞர்களே, ஜனநாயகவாதிகளே...
ஏழைகளுக்கு எட்டாகனியாக நீதியை வைக்க அனுமதிக்காதீர்... ஜனநாயகத்துக்கு நாகரீகத்திற்கு பெரும் இழுக்கு....

நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்..  
வேறு என்னத்தைச் சொல்ல....?

புதன், 6 மே, 2015

உத்தம வில்லன்கள் ......

இது சினிமா விமர்சனம் இல்லை என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன்...

1995 வாக்கில் பிரபல (?) தாதா தாவூத் இப்ராஹிம், ரர்ம் ஜெத்மலானியைத் தொடர்பு கொண்டு தான் மும்பை வெடிகுண்டு வழக்கில் சரணடைய விரும்புவதாகவும் அதற்கு சில நிபந்தனைகளையும் தெரிவிதததாகவும் சொன்னாராம்... அதாகப்பட்டது தன்னை வீட்டுக் காவில்தான் வைக்க வேண்டுமாம் வேறு எந்த THIRD DEGREE வழிமுறைகளையும் காவல்துறை கையாளக் கூடாது ஆகியவை.                ஜெத்மலானியும் அப்போது ஆட்சியில் இருந்த சரத்பாவரிடம் தெரிவித்து விட்டதாகவும் கூறினார்.  அவரோ இந்த வழக்கு CBI வசம் இருப்பதால் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று கைவிரித்து விட்டாராம்...

அது தற்போது மீண்டும் வெளியாகியிருக்கிறது... அதைப் பற்றி கேட்கச் சென்ற டிவி நிருபவரை சரத்பவார்  “ நீ வீட்டுக்கு வா அப்பறம் பாககலாம்” என்று துரத்தி அடித்ததைக் காட்டினார்கள்...  அவர் அதைப் பற்றி ஏன் பேச மறுக்கிறார் என்பதெல்லாம் மிக மர்மமாகவே தெரிகிறது......... என்ன உள் குத்து என்றே தெரியவில்லை...

பிஜேபி பிரமுகர் நரசிம்மராவ் அதைப் பற்றிக் கூறும் போது ”அதெல்லாம் நடக்காது..... என்ன நடந்தது என்பதை வெளிக் கொண்டு வருவோம் ”,  என்று முழங்கி சரியாக ஒரு நாள் ஆகியிருக்கும்..

தற்போது மத்திய அரசு கூறுகிறது ”தாவூத் எங்கே இருக்கிறார் என்பதே தெரியவில்லை.. அப்பறம்தான் அவரை இந்தியா கொண்டு வருவதைப் பற்றிப் பேச முடியும்” என்று...... சரத்பாவாரே தேவலாம் என்று தோன்றியது... 

காங்., மற்றும் பிஜேபி ஒன்றுக்கொன்று மாற்று என்கிறார்கள்..  சற்று மாற்றிச் சொல்லவேண்டும்.. ஒன்றுக்கொன்று ஒற்றுமை என்று...(சில விஷயங்கள் தவிர்த்து)
====
பெருஞ்சீமான் சல்மான் கானுக்கு 5 வருட சிறை என்கிற தீர்ப்பு வந்திருக்கிறது... மது மயக்கத்தில் லைசென்ஸ் இல்லாமல் காரை பிளாட்பார வாசிகள் மேல் ஓட்டி பலரை படு காயப் படுத்தி ஒருவர் உயிரைப் பறித்ததற்கு...

இந்த வழக்கு 12 வருடமாக இழுபறியாக சென்று தற்போது இந்தத் தீர்ப்பு வந்துள்ளது.. சல்மான் இந்த வழக்கை நீர்த்துப் போக என்ன செய்தார் என்பது பற்றி ஊடகங்களில் வெளியாகி நாறிப் போய் இருக்கிறது...

எத்தனையோ கோடிகள் கொட்டத் தயாராகயிருந்தும்... நீதியை விலைக்கு வாங்க முடியவில்லை... நீதி வென்றுவிட்டது...