வியாழன், 28 ஜூன், 2018

என்றெமதன்னை கை விலங்குகள் போகும் ....

சமீப நாட்களில் என்றுமில்லாத வகையில் என்னை பாதித்த செய்திப்படம் இதுதான்
எங்கே தவறு .........இந்த இழிவை எங்கனம் போக்குவது என்று நாம் தீவிரமாக சிந்திக்கவிட்டால் .....நாம் பெண் குலத்திற்கு மட்டுமல்ல மனித குலத்திற்கே தீங்கு செய்தவர்கள் ஆகிவிடுவோம் .......

திங்கள், 11 ஜூன், 2018

காலா.....

இன்றைய தினங்களில் வரும் பல குப்பை படங்களில் காலா சற்றே வித்தியாசமான படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை..

 மேலும் எங்களது இலாகாவின் தொழிற்சங்க முன்னணி தோழர் ஆதவன் தீட்சண்யா வசனம் எழுதியுள்ளார் .....

வசனங்களும் மிக கூர்மையாக உள்ளது ....பெரும் பிரச்சார நெடி வாராமல் ஒரு படத்தை எடுப்பது மிக சிரமம்... அதை இயக்குனர்       பா ரஞ்சித் நேர்த்தியாக செய்துள்ளார்...

Image result for KAALA  PICTURE

ரஜினி இந்த படத்தில் இயக்குனருக்கு அடங்கி நடித்திருப்பதை போலத்தான் தெரிகிறது 


 இருந்தாலும்... இருந்தாலும்..... அவர் இயக்கிய மெட்ராஸ் மனதில் ஒட்டியதை போல மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் அதே கலைத்தன்மை அவரின் அடுத்த படைப்பில் தருவார் என்கிற நம்பிக்கையில் அவருக்கு வாழ்த்துக்கள் 

ஞாயிறு, 3 ஜூன், 2018

தலைகீழ் உலகம்.....

தந்தி டிவியில் வைகோவுடனான பாண்டேயின் கேள்விக்கென்ன பதில் பார்க்க நேர்ந்தது..

 முதல் முறையாக பாண்டேயின் மீதான நம்பிக்கைத் தளர்ந்தது..  அதே சமயத்தில் இது நாள் வரை வைகோவைப் பற்றி சமூக ஊடகங்கள் எத்தனை மீம்ஸ்கள் கேலிகள் கிண்டல்கள் என அவரை நோகடித்திருக்கிறார்கள்... 

அவர் தமிழரில்லை என்று வேறு அவரை அவமானப்படுத்தியிருக்கிறார்கள்...   அவர் ஒரு பஃபூன் போல எத்தனை சித்தரிப்புகள்...   ஆனால் நேற்று அவர் பேட்டியைப் பார்த்த போது  இது ஒரு குருட்டு உலகமடா என்கிற வேதனைதான் மிஞ்சியது..

வைகோ அத்தனை உண்மையும்  போட்டு உடைக்கிறார்.. அதனால்தான் அவரை கோமாளி என்கிறார்கள் ..

மனதில் பட்டத்தை உள்ளொன்று வைத்து புறம் பேசத் தெரியவில்லை அதனால் அவரை பஃபூன் என்கிறார்கள்...

இதுதான் உலக நியதி போலும்...

எந்தப் போராட்டத்திலும் பங்கேற்காத எந்த மக்கள் பிரச்சனைகளையும் பற்றித் தெரியாத  வயதாகிய பிறகு  இளைப்பாருவோமே என நினைப்பதற்கு அரசியல் என்பது பொழுது போக்கு அல்ல...  

அது ரத்தம் சிந்தாத யுத்தம் என்பதே தெரியாது  ஆளும் வர்க்கம் சொன்னதை  கடமையாக ஏற்று மக்களுக்கு உபதேசம் செய்துவிட்டு போகும்  மேனாமினிக்கிகள் எங்கே...

வாழ்நாள் முழுவதும் மக்கள் பிரச்சனைகள் என அலைந்து பல வழக்குகள்  பல அச்சுறுத்துதள்  சந்தித்து வரும்  வைகோ எங்கே...

உண்மையான கதாநாயகன் இவர்தான்....  ஆனால் நாம் பொய்களின் பின்னால் அணிவகுக்கிறோம்...

 வைகோ போன்ற  முற்போக்கு சக்திகள் மற்றும் கம்யூனிஸ்டுகள் போன்ற மக்கள் நேசர்கள் பக்கம் நிற்பதால் மட்டுமே சாதாரண சாமானிய மக்களுக்கான நீதி கிடைக்கும் என்பது எத்தனை எளிய உண்மை....

THE GREATEST THINGS IN THE WORLD ARE THE SIMPLEST TRUTH.....

வியாழன், 31 மே, 2018

என்னை நினைச்சு நானும் சிரிச்சேன்....

அடாடா என்ன ஆக்ரோஷம்... சமூக விரோதிகளைக் கண்டு..  நமக்கும்தான் ஆக்ரோஷம் வருகிறது...

 ''சும்மா  போராட்டம் போராட்டம்னு கம்பு சுத்தாதிங்கய்யா...''

''சரிங்க எசமான்....''

''மீத்தேன் எடுக்கறான்.'''

''. அட ... பாத்துக்கலாம்... போராடாத...''

''ஸ்டெர்லைட் ஆலையால கேன்சர் வருது... ''

''பாத்துக்கலாம்..  போராடாத...சமூக விரோதி பூச்சாண்டி..... சாக்கிரத....''

''காவிரியில தண்ணி தரமாட்டாங்கறான்... உச்ச நீதிமன்றத்
தீர்ப்பகூட மதிக்க மாட்டேங்கறான்...''

''சு... ஸ்....சும்மா... அதெல்லாம் போராடக் கூடாது .. பாத்துக்கலாம்...''..

என்னய்யா...போராட்டம் போராட்டம்னா... சினிமா பாக்க வேணாம்....உன் ஆசையெல்லாம் திரையில் பாத்துக்கோ...
தணிச்சுக்கோ....

கமல் இந்த விஷயத்தை நாசூக்கா சொல்றார்... அவர் நிறைய  விஷயம்  அறிஞ்சவர்.... இந்த ரசினி எல்லாத்தையும்  இப்படியா போட்டு உடைக்கிறது...

குழந்தைக்குப் பேச்சே வரலன்னு கவலப்பட்ட தகப்பனைப் பாத்து  அது  பேச ஆரம்பிச்ச முத வார்த்தை  '' அப்பா நீ எப்ப சாவேன்'னதாம்... அந்தக் கதயலால்ல இருக்கு...

இரண்டு பேரும் பிஜேபியால் மறைமுகமாகத் தூண்டப்பட்டவர்கள்னு   சிலர் சொன்ன  போது  அவங்களப் பாத்துச் சிரிச்சேன்...இப்ப என்னைப் பாத்து நானே சிரிக்கிறேன்...

புதன், 23 மே, 2018

துப்பாக்கி .......இது ஜனநாயக நாடா என்கிற அச்சம் வருகிறது...
 நெஞ்சை பதற வைக்கிறது அந்த 17 வயது சிறுமியின் புகைப்படம் ...

அந்த பெண் என்ன அப்படி கேட்டுவிட்டாள்.. கூலி உயர்வா..? அரசு பதவி விலகவா கேட்டாள்? இல்லை தனி நாடு கேட்டாளா? 

 என் மக்களுக்கு கேன்சர் வரும் ஒரு தொழிற்சாலை வேண்டாம் என்றால் அதற்கு பரிசா இது ?

என்ன நடந்தது என்பது மக்களின் பெரும் பகுதிக்கு  தெரிந்தே இருக்கிறது ... 

மக்களை ஆள்வது கார்பொரேட் கம்பெனிகள்  என்பது பச்சையாக பட்டவர்த்தனமாக அம்மணமாக தெரிகிறது... நிச்சயம் ஒரு மக்கள் நல அரசு என்பது என்ன என்பதை வெளிநாட்டில் போய் கற்றுக்கொள்ளட்டும் ஆள்வோர் ...

திங்கள், 7 மே, 2018

கிரௌஞ்ச வதம்

 நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம் வந்து இரண்டு நாட்களாக வேதனை விரக்தி கோபத்தின் உச்சத்திற்கே செல்ல வேண்டியிருக்கிறது


இப்படி ஒரு மத்திய அரசு  நிறுவனம் ஏழை ஜனங்களை மாணவர் செல்வங்களை பாடாய்ப்  படுத்துமா என்றே புரியவில்லை...  எந்த  நாட்டிலாவது இப்படி நடக்குமா..?


 தமிழர்கள்  என்றால் மாற்றாந்தாய் மனப்பான்மை என்று ஏற்கனவே புலம்பும்  ஒரு பிரிவின் வாதத்தை சரி என்று அரசே ஆக்க நினைக்கிறது என்று ஆகாதா ...?

பழி வாங்க வேண்டும் என்பதற்காக ஒரு அவலத்தை அரசு நிறுவனம் கட்டவிழ்த்து விடுமா ...?

NEET விவகாரத்தில் இந்த வருடம்  CBSE மற்றும் மத்திய அரசு   நடந்து கொண்ட விதம் ஒரு 

கிரௌஞ்ச வதம் 

செவ்வாய், 24 ஏப்ரல், 2018

ஆண்களை நெறிப்படுத்துக....

 நாட்டில் நடக்கும் கொடுமைகள் அதுவும் பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள் என்னை போன்ற சாதாரண பிரஜைகளை கலக்கமுறவும் மன ரீதியாக பாதிக்கவும் செய்கிறது ... என்னை சந்திக்கும் என்னை போன்ற பல பெற்றோர்கள்  அவ்வாறே கருதுகின்றனர்..   

இந்த சமயத்தில் எஸ் வி சேகர் பெண் பத்திரிகையாளர்களை பற்றிய செய்தியை பகிர்ந்ததும் பலரை முகம் சுழிக்க வைத்துள்ளது .. 

இந்த இடத்தில் இரு பிரமுகர்கள்  கமல் அவர்களும்,  மூத்த வழக்கறிஞர் சாந்தகுமாரி அவர்களும்கூறிய வார்த்தைகள் முக்கியமானதாக பட்டது .. 

''பெண்களை ஒழுக்கமாகவும் ஆடைகளை சரியாக உடுத்திக்கொள்ள சொல்லும் சமூகம் ஒரு ஆணை எப்படி வேண்டுமானாலும் இரு என்ன வேண்டுமானாலும் செய் என்பது எப்படி சம நீதி ஆகும் .. ''என்று கேட்டார்கள் 

ஒரு ஆண் பிள்ளையை ஒழுக்கமாக இரு.. பெண்களை மதிக்க கற்றுக்கொள் என்று ஏன் சொல்வதில்லை... ஆண்களை நெறிப்படுத்தவேண்டியது காலத்தின் கட்டாயம்.... இல்லையேல் சமூகம் கெட்டுவிடும் .....

சமூக சிந்தனையாளர்கள் ஜனநாயகவாதிகள் இந்த ஆண் சமூகத்தை நெறிப்படுத்த வேண்டிய காரியத்தை செய்யவேண்டிய தருணம் இது .....