ஞாயிறு, 15 அக்டோபர், 2017

தமிழும், திராவிடமும்....

இந்தத் தலைப்பே சுவாரசியமானது விவகாரமானது விவாதத்திற்குரியதுதான்.. இது முன்பிருந்த சமாச்சாரமானாலும் தற்போது அதிகம் விவாததிற்குள்ளாகியிருக்கிறது.. அதற்கு இணைய உலகம் ஒரு காரணமாக இருக்கலாம்.. 

திராவிடர்கள்தான் தமிழர்கள் என்று ஒரு புறம்.. அதெப்படி மலையாளியும் கன்னடனும் தெலுங்கனும் தமிழை ஏற்கவே மறுக்கிறான் அவனும் திராவிடன்தானே என்று மறு புறம். தமிழிலிருந்து தோன்றிய மொழிகள்தான் மற்ற மொழிகள் என்பதை பிற மாநிலத்தவன் ஏற்க மாட்டான் ஆகவே அவன் திராவிடத்தை ஏற்கவில்லை என்று ஒருவரும் அப்படி ஏற்கவில்லை என்றால் நாம் மட்டும் அதை ஏன் தலையில் ஏற்றிச் சுமக்க வேண்டும் என்று எதிர்வாதமும் மாறி மாறி சுழன்றடிக்கிறது..

எனக்குத் தெரிந்த வகையில் பார்க்கும் போது, திராவிடம் என்கிற சொல்லாடலே பழந்தமிழில் புழக்கத்தில் இல்லாத சொல்லாகத்தான் இருக்கிறது.. காரணம் திருக்குறளில் 1330 குறளிலும் திராவிடம் என்கிற சொல்லே இல்லை.  தொல்காப்பியம் ஆகட்டும் கம்பராமாயணம் சிலப்பதிகாரம் ஆகிய தமிழ்க் காவியங்களிலும் திராவிடம் என்கிற சொல்லாடலே இல்லை.  காரணம் அப்படி ஒரு குறியீடு இல்லை என்றே நாம் கொள்ளவேண்டும். ( ஒரு வேளை அதனால்தான் பெரியார் இவைகளை குப்பைகள் என்றே சொன்னார் போலும்).   சௌத் இண்டியன் லாங்வேஜ் அல்லது திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்  என்பது ராபர்ட் கால்டுவெல் என்பவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு நூலில்தான் அப்படி ஒரு சொல்லாடல் இருக்கிறது என்பதால் அதையே திராவிடக் கட்சிகள் எடுத்துக் கொண்டன என்கிறார் பெ மணியரசன் அவர்கள். 

ஆனால் ஆதிசங்கரர் எழுதிய சௌந்தர்யலஹரியின் ஒரு ஸ்லோகத்தில் (பாடல் 75) திராவிட சிசு என்று ஒரு சொல்லாடல் பார்க்க முடிகிறது.  ஆதிசங்கரர் வாழ்ந்த காலகட்டம் கிபி 4 அல்லது 7 நூற்றாண்டு.  ஆக அப்போது அந்தச் சொல்லாடல் இருக்கலாம்.. ஆனால் அதற்குப் பின்னர் அது வழக்கத்தில் வரவில்லை.  மேலும் திராவிட சிசு என்று ஆதிசங்கரர் தன்னை வர்ணித்தாரா இல்லை திருஞானசம்பந்தரை வர்ணித்தாரா என்பதே குழப்பமாக உள்ளது.. ஆனால் இருவரும் பிராமணர்கள்தான்..  ஏன் பிராமணர்கள் என்கிறேன் என்றால் திராவிடர்கள் பிராமணர்கள் இல்லை என்றே தற்போது அறியப்படுகிறது.. அதற்கு மாறாக ஆதிசங்கரர் குறிப்பிடுகிறாரே...

ஆனால் தமிழ் நாட்டில் திராவிட கட்சிகள்,  தமிழர் முன்னேற்றக் கழகம் என்றோ தமிழர் கழகம் என்றோ தமது கட்சிகளுக்குப் பெயர் வைத்தால்  தமிழைத் தாய் மொழியாக கொண்ட பிராமணர்கள் உள்ளே வந்துவிடுவார்கள் என்கிற உயரிய  (?) நோக்கத்துடன் அதைத் தவிர்த்து பெயரிட்டதாக சொல்லப்படுகிறது.  சரி தற்போது சீமான் பாரதிராஜா போன்றோர் வேற்று மொழிகாரர்களை ஏற்க மாட்டேன் என்கிற போது திராவிடக் கட்சிகள் அதை எதிர்க்கின்றன.. (பாரதிராஜா ரஜினியை மட்டுமல்ல வைகோவைக் கூட தமிழர் தலைவர் என்று ஏற்க மாட்டேன் என்று ஒரு போடு போட்டார்).  இந்த விஷயங்கள் திராவிடக் கட்சிகளை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கிறது.   காரணம் பெரியார் டிஎம் நாயர்  சர் பிடிதியாராயர் போன்றவர்களை திராவிட கட்சிகள் கைவிடமுடியாது அவர்கள்தான் ஜஸ்டிஸ் கட்சியின் தோற்றுவாயாக இருந்தவர்கள்..  அவர்கள் இவாளை ஒதுக்கினார்கள் அதுவே தற்போது வேறுவிதமாக தாக்கி இவர்களையே ஒதுக்கும் சூழல் வருகிறது.  ஆகவே அலறுகிறார்கள். விடுதலைசிறுத்தைகள் ரவிகுமார் ஒரு படி மேலே சென்று சென்று தற்போது ஆரியர்கள் என்பதே முட்டாள்தனமானது என்கிறார்.  காரணம் சென்ற நூற்றாண்டில் பேசியது தற்போதைய 2017 நடைமுறைக்கு  DNA TEST செய்து பார்த்தால் யாருக்கும்  பொருந்தவே பொருந்தாது என்கிறார்.   

ஆனால் காய்தல் உவத்தல் இன்றி பார்த்தால்....

தமிழர்களை, தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள்  (அந்த உணர்வுள்ளர்கள்) ஆட்சி செய்ய வேண்டும் என்பது ஒதுக்கப்பட வேண்டிய விஷயமன்று.  அது ஒரு ஜனநாயகக் கோரிக்கைதான்.  அது ஒரு தேசிய இன அடையாமாகவே பார்க்கலாம் ..  அது காந்திய வழியில் மட்டுமே அடைய வேண்டிய ஒன்றுதான்...

அப்படித்தான் நமக்கு ஒரு காமராசர் கிடைத்தார்.. 


2 கருத்துகள் :

வேகநரி சொன்னது…

திராவிட பிதற்றல்கள் பற்றிய நல்லதொரு பதிவு.
//திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்பது ராபர்ட் கால்டுவெல் என்பவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு நூலில்தான் அப்படி ஒரு சொல்லாடல் இருக்கிறது //
வெள்ளைகரரர் சொன்னாலே தமிழர்களுக்கு அதில் ஒரு தனி கவர்ச்சி தான். ஏமி ஜாக்சன் திராவிடம் பற்றி என்ன சொன்னார் என்று நானும் தான் தேடிக்கொண்டிருக்கிறேன்.
//ஆனால் தமிழ் நாட்டில் திராவிட கட்சிகள், தமிழர் முன்னேற்றக் கழகம் என்றோ தமிழர் கழகம் என்றோ தமது கட்சிகளுக்குப் பெயர் வைத்தால் தமிழைத் தாய் மொழியாக கொண்ட பிராமணர்கள் உள்ளே வந்துவிடுவார்கள் என்கிற உயரிய (?) நோக்கத்துடன் அதைத் தவிர்த்து பெயரிட்டதாக சொல்லப்படுகிறது.//
இந்தளவுக்கு ஜாதி பார்த்து மனித துவேஷம் கொள்ளும் இவர்களினாலேயே தமிழகத்தில் ஜாதி வேற்றுமைகள் ஒழியாம மேலும் நன்றாக வளர்கிறது.

silanerangalil sila karuththukkal சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வேகநரி