புதன், 28 அக்டோபர், 2015

டாக்டர் ஜோனஸ் சால்க் என்கிற கடவுள்.....

தேசிய தொலைத் தொடர்பு சங்கம் (NFTE) காஞ்சிபுரம்  தோழர்கள் நடத்தும் வலை தளத்தில் இந்தச் செய்தியைப் படித்தேன்... கண்கள் பனிக்காமல் முடிக்க முடியவில்லை...

இதோ அந்தச் செய்தி
--------
இன்று போலியோ நோய்க்கு தடுப்பு மருந்து கண்டு பிடித்த டாக்டர் ஜோனஸ் சால்க் பிறந்த தினம். அமெரிக்காவின் நியுயார்க் நகரில் யூத பெற்றோர்களுக்கு 1924 ல அக்டோபர் 28ம் நாள் பிறந்தவர். இவர் வைராலஜி, தொற்று நோயியல் போன்றவற்றில் உயரிய பட்டம் பெற்றிருக்கிறார். உலகம் முழுவது இளம்பிள்ளை வாதம் (போலியோ) நோய் பரவியிருந்த சமயம். இந்த நோய் ஒருமுறை தாக்கினால் பின்னர் அதனால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்யவே முடியாது என்கிற அச்சமும் மக்களை பாடாய்படுத்திக் கொண்டிருந்தது. பிட்ஸ்பர்க் மருத்துவப்பள்ளியில் டாக்டர் ஜோனஸ் சால்க் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழுவாக இரவு பகலாக உழைத்தார்கள். ஏழு வருட உழைப்பின் விளைவாக உலகை அச்சுறுத்திக்கொண்டு இருந்த போலியோவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்தார் கண்டுபிடித்த மருந்தை தங்களுக்கு தாங்களே செலுத்தி பார்த்து, தீங்கு எதுவுமில்லை என்பதை உறுதி செய்து கொண்டு நாடு முழுக்க உள்ள ஐந்து லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்தை செலுத்தினார்கள். இரண்டு வருடங்கள் நடந்த நெடிய ஆய்வுகள் மற்றும் சோதனைகளுக்கு பிறகு சால்க் கண்டுபிடித்த தடுப்பு மருந்து எந்த தீங்கும் இல்லாதது என்று அறிவிக்கப்பட்டது. மருந்து கண்டுபிடிக்கப்பட்ட வருடம் அமெரிக்காவில் 45,000. பேருக்கு இளம்பிள்ளை வாத நோய் இருந்தது. மருந்து அறிமுகமான வேகத்தில் ஐந்தே வருடங்களில் இந்த எண்ணிக்கை 910 என்கிற அளவுக்கு விழுந்தது. டாக்டர் ஜோனஸ் சால்க் தான் கண்டு பிடித்த அற்புதமான மருந்துக்கு காப்புரிமை பெறவில்லை. அதற்கான விருப்பமே அவரிடம் இருந்தது இல்லை. பேட்டி ஒன்றில், ஏன் நீங்கள் உரிமம் பெறவில்லை எனக்கேட்டதற்கு, சூரியனுக்கு யாராவது உரிமை கொண்டாட முடியுமா என்று கேட்டார், இந்த மாமனிதர்! இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 5 வயதுக்கும் குறைந்த சுமார் 15 கோடி குழந்தைகளுக்கு இலவசமாக போலியோ சொட்டு மருந்து இடப்பட்டு வருகிறது. சுமார் 150 நாடுகளில் போலியோ நோய் முற்றிலுமாக தடுக்கப்பட்டுவிடதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கு முழு மூல காரணம் டாக்டர் ஜோனஸ் சால்க் தான். இன்று பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ்... போன்றவர்களை போற்றும் இந்த உலகம், இவரை யாரென்று கூட தெரிந்துகொள்ளவில்லை என்பது கசப்பான உண்மை...!

கருத்துகள் இல்லை :