புதன், 23 மார்ச், 2016

மீண்டும் பாண்டவர் அணி….?

ஒரு வழியாக கேப்டன் ஒரு முடிவு எடுத்துவிட்டார்… மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி என்று….
அவர் தான் தனியாக நிற்பேன் என்று வீரவசனம் பேசிய போதே கட்சியே கலகலத்துவிடும் புரியமால் பேசுகிறார் என்று பல அரசியல் நோக்கர்கள் சொல்லிவந்தார்கள்… தாமதமானாலும் அவருக்குப் புரிந்து விட்டதால் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்

அரசியல் அரங்கத்தில் பெரும் அனுபவம் வாய்ந்த கலைஞர் எப்படி பழம் கனிந்து பாலில் விழும் என்றார்… அவருக்கு அப்படிப்பட்ட உத்தரவாதம் தந்தது யார்.. அதை எப்படி நம்பினார்… கலைஞரே சொல்வதால் அது உண்மை என்றுதான் பலர் கூறினர்.. ஒரு வேளை கேப்டனை குழப்ப  அப்படிக் கூறினாரா.. (அதே சமயம் ஸ்டாலின் திட்டவட்டமாக மறுத்தார் என்பது வேறு விஷயம்…) இது ஒரு பெரிய அரசியல் ஆச்சரியம்தான்…

ஒவ்வொரு தேர்தலிலும் இதைப் போன்ற விஷயங்கள் நடப்பது உண்மைதான் என்றாலும்., ம.ந.கூ  நினைப்பதைப் போல தமிழக மக்கள் இந்த முறை புதிய அணிக்கு வாக்களிப்பார்கள் என்பது சரியா என்பது மிலியன் டாலர் கேள்வியாகவே இருக்கிறது..

மாற்றம் என்பது தவிர்க்க முடியாதுதான்.. ஒரு வேளை இந்த முறை இல்லாவிட்டாலும் அடுத்த முறையாவது மக்கள் அதிமுக திமுக அல்லாத ஒரு அணிக்கு வாய்ப்பளிக்கக் கூடும் என்றுதான் நான் நம்புகிறேன்.. அதற்கு காரணம் கிட்டத்தட்ட ஒரு கோடி புதிய வாக்காளர்கள் வந்திருப்பது (இந்த இளைஞர்கள் கடந்த கால விழுமியங்களைப் பற்றிய புரிதலோ அல்லது அலட்சிய மனப்பான்மையோ கொண்டிருப்பவர்கள்) மக்கள் மனதிலும்  இதுவரை ஆண்ட அதிமுக திமுக ஆகியவை மாறி மாறி ஆண்டு கணிசமான கெட்ட பெயர் சம்பாதித்துக் கொண்டது உண்மைதான்…..

அதிமுகவின் தற்போதைய ஆட்சி பற்றி பிரபல பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி போன்றவர்களே பல அதிருப்தியை தெரிவித்திருக்கிறார்கள் (http://www.badriseshadri.in/2015/04/blog-post_8.html).. இந்த ஆட்சி மையப் படுத்தப்பட்ட ஊழல் ஆட்சி என்கிறார் பழ கருப்பையா… அது உண்மையாக இருந்தாலும்,  இதே மையப்படுத்தப் ஊழல் கட்சியில் இருந்துவிட்டு ஆட்சியின் கடைசி காலத்தில் அப்படிக் கூறியதால் அவர் பேச்சு எடுபடவில்லை… 

அதிமுக என்கிற கட்சியின் நோக்கம் என்பதே ஆட்சி அதிகாரத்தை கைபற்றுவது அதன் மூலம் தனிப்பட்ட ஆதாயம் அடைவது என்பது சரிதான் என்றாலும்  திமுக மட்டும் அப்படி இல்லை என்று சொல்லிவிடமுடியுமா…? ஒரு காலத்தில் திராவிடம் பிராமண ஆதிக்க எதிர்ப்பு என்பதற்காக ஆரம்பித்து கிட்டத்தட்ட கலைஞர் வயதுள்ள திமுகவும்  ஆட்சி அதிகாரத்தை தற்போது கைபற்றுவதும்கூட தங்கள் தனிப்பட்ட நலன்களை பாதுகாக்கவே என்பதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்… அதற்கான உரைகல் என்பதே திமுகவின் தோல்விகள் அதைப் போல அதிமுகவின் தோல்விகளும்… மக்களின் வெறுப்பையே மாறி மாறி ஓட்டுப் போட வைத்தது.. அதுதான் மையப் புள்ளி என்று நான் நினைக்கிறேன்… உண்மையில் அதிமுக திமுகவுக்கு மாற்றாக ஒரு அணியை மக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள் என்பது உண்மைதான் என்று அறுதியிட்டுக் கூற முடியும்…

இப்போதுதான் நம் முன் சில கேள்விகள் எழுகிறது

1)   தமிழ்நாட்டு மக்கள் அப்படி புதியவர்கள் தேர்வு செய்ய மாட்டார்கள்  -அது உண்மை என்று எப்போதும் இருக்காது..மாறும்.. அப்படித்தான் திமுக 50களில் வந்தது
2)   டெல்லியில் கெஜ்ரிவால் எந்த அமைப்பு ரீதியில் எந்த பலமும் இல்லாமல் ஆட்சியைப் பிடிக்கவில்லையா . அப்படியே நாம் தமிழகத்தில் பொருத்த முடியாது காரணம் டெல்லி என்பது பெரும் பாலும் படித்த நடுத்தர வர்க்க மக்கள் கூட்டம் உள்ள இடம்.. ஆனால் தமிழகம் என்பது அப்படியல்ல பாரதூரமான பல தரப்பட்ட மக்கள் வசிக்கும் இடம்.

ஆக இரண்டும் உண்மைதான்…

சரி இப்போது ம,ந,கூட்டணிக்கு வருவோம்..

கேப்டனுடன் புதிய கூட்டணியை அறிவித்த போது தோழர் முத்தரசன் பேசியது  சற்றே உறுத்தியது…

2016ல் நடக்கப் போவது ஒரு போர் என்றார் ..கேப்டனை தருமராகவும் திருமாவை பீமனாகவும் வைகோவை அர்ஜீனனாகவும் தன்னையும் சிபிஎம் ராமகிருஷ்ணனை நகுல சகாதேவராகவும் உருவகப் படுத்திக் கூறினார்…

தோழர்கள் ஜீவா,  சீனுவாசராவ் போன்ற தியாகிகளால் உருவான மாபெரும் கட்சி திமுகவுக்கு இணையாக தமிழகம் முழுவதும் அமைப்பு ரீதியாக  கட்சி அமைப்பு கொண்டுள்ள ஒரு இயக்கம் தங்களை அப்படித் தாழ்த்திக் கொள்வதைப் பார்த்த போது பரிதாபமாகவே இருந்தது…

அதிமுகவை எதிர்ப்பார்கள் ஆனால் அவர்கள் தயவில் மாநிலங்களவை எம்பியை வைத்திருப்பார்கள்.. திமுகவை எதிர்ப்பார்கள் ஆனால் கூட்டு வைப்பார்கள் என்றெல்லாம் கம்யூனிஸ்ட் கட்சி மாறிப் போனது காலத்தின் கோலம்தான்… ஒரு முறை ஒரு தோழர் சொன்னார் எங்களுக்கென்று முதலாளிகள் புரவலராக இருக்க மாட்டார்கள்.. அது சாத்தியம் இல்லை… எங்களுக்கும் மந்திரிகள் ஆக வேண்டும் என்கிற எந்தவித நோக்கமும் இல்லை இந்தச் சூழலில் இந்திய அரசியல் அமைப்பில் எங்கள் குரலை பதிவு செய்ய ஒரு வாய்ப்பாக பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பயன் படுத்திக் கொள்கிறோம்… அதை இப்படித்தான் பயன் படுத்த வேண்டும் என்று வழமையான அரசியல் வழியில்தான் செய்ய வேண்டும் என்பதை ஏற்க முடியாது என்று வியாக்யானம் செய்தார்… அதில் சற்று உண்மை இருக்கிறது என்றாலும் அதுவே கட்சியின் பயன்பாடாய் போனது என்பது வேறு விஷயம்..

இந்த குழப்பத்தில் வைகோ கேப்டன் திருமா போன்றவர்களுக்கு  உள்ள ஒரே நன்மை எந்தவித குற்றச்சாட்டுக்கும் இதுவரை ஆளாகவில்லை என்பது மட்டுமே… அவர்களிடம் அதிகாரம் வந்தால் எப்படி இருப்பார்கள் அதிலும் குறிப்பாக கேப்டன் எப்படி இருப்பார் என்பது பெருத்த சந்தேகத்தை வரலாறு குறிப்பாக தமிழக வரலாறு நமக்கு ஏற்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை….


ஆனால் தற்போது நம்மிடம் உள்ள எந்தவித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத ஓரே அணி மக்கள் நலக் கூட்டணிதான் என்பது உண்மையே…

4 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

வைகோ மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பார். அவரின் ஒரே இலக்கு பெட்டி. விசயகாந்த் எப்படியாவது திமுக கூட்டணியில் சேர்வதை தடுக்க வேண்டும்.அம்மாவின் ஒரே நம்பிக்கைக்குரிய ஆள் வைகோ. தேர்தல் என்றாலே இந்த மாதிரி சிறு கட்சி தலைவர்களுக்கு பெருவிருந்து தான். பற்பல கோடிகள் கை மாறுகிறது. வெளியே உணர்ச்சி வசப்பட்டு பேசுவதெல்லாம் இந்த பெட்டிக்கு தானே. மக்கள் எப்படி போனால் இவர்களுக்கு என்ன.

silanerangalil sila karuththukkal சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனானி... ஆனால் உங்கள் தரப்பை நான் ஏற்கவில்லை... ஒருவேளை நீங்கள் திமுக அனுதாபியாக இருக்கலாம்... கோடிகள் பணப் பெட்டி என்பதெல்லாம் திமுகவின் மேடைகளில் சாதாரணமாகப் பேசும் பேச்சு... வைகோவின் எந்தவித அரசியல் நிலைபாடு (விடுதலைபுலிகள் உள்பட) சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றுதான்.. இருப்பினும் 5 ஆண்டு பொடாவில் இருந்தவர்.. திமுகவும் அதிமுகவும் அவரையும் அவர் கட்சியையும் சுக்குநூறாக்கினாலும் இயங்கி வருபவர்.. அந்த வகையில் சலியாத உழைப்பாளிதான்...ஆனால் “எத்தனை அடித்தாலும் தாங்குகிறவர்“ என்பதால் என்னவேண்டுமானாலும் கூறலாம் என்பதை என்னால் ஏற்க முடியவில்லை...

மீரா செல்வக்குமார் சொன்னது…

உங்கள் கருத்து சரியே...எனக்கும் இந்த தோழர்களின் செயல்பாடுகள் வருத்தத்தையே அளிக்கிறது...

silanerangalil sila karuththukkal சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மீரா செல்வக்குமார் அவர்களே....