சனி, 6 ஆகஸ்ட், 2016

நம்மிடம்தான் பிரச்சனை....

தமிழ்மணத்தின் பல ஆண்டு கால வாசகன் நான்..  ஆனால் வலை தளம் தொடங்கியது மே 2013தான்… 


வலைதளங்களில் எழுதுவதில் பல நன்மைகள் உண்டு.  உலகெங்கும் நமது எழுத்து செல்வது மற்றும் எத்தனை பேர் படித்திருக்கிறார்கள் என்கிற டிஜிட்டல் துல்லியம்.. இது வேறு எந்த ஊடகத்திற்கும் கிடையாது.. ஆகவே உண்மையில் வலைதளம் முற்போக்கானது… மக்களுக்கானது…

வலைதளங்கள் இத்தனை வெளிப்படையாக இயங்குவதாலே எல்லாவற்றையும் அம்பலப்படுத்திவிடுகிறது… உலகெங்கும் மக்கள் ரசனை எப்படியிருக்கிறது என்கிற டிரெண்டை உடனே நமக்குக் காட்டி வருகிறது..

உதாரணத்திற்கு என்னுடைய ஆரம்ப கால கட்டுரைகளை சராசரியாக 50 முதல் 75 வரை படித்துக் கொண்டிருந்தார்கள்.. நான் சமூக விஷயங்கள்  மட்டுமே கவனப்படுத்துவேன்..... ஆக அந்த விஷயங்களே எனது கட்டுரையின் பாடுபொருள்… அப்படி எழுதும் போது சில அறிவார்ந்தவர்கள் சில அறிவுரைக் கூறினார்கள்.. வளவளவென்று எழுதாதீர்கள்.. சொல்ல வந்ததை இயன்ற வரை சுருங்கச் சொல்லப் பாருங்கள் என்றார்கள்.  அதன்படியே எழுதி வருகிறேன்..

அது மெல்ல வளர்ந்து தற்போது சராசரியாக 300 முதல் 400 வரை படிக்கிறார்கள்.. அதே சமயம் திரைப்படங்களைப் பற்றி எழுதினாலோ கமல் ரஜினி என்று எழுதினாலோ 1000க்கும் அதிகமாக மக்கள் படிப்பதாகப் பார்க்க நேர்கிறது.. சற்றே அதிர்ச்சியாகக் கூட இருக்கும்...

இன்னமும் நமது மக்கள் அதிலும் குறிப்பாக வலைதள வாசகர்கள் திரைப்படத்திற்குத் தரும் முக்கியத்துவம் சமூக விஷயங்களுக்கு தருவதில்லை என்பது எனக்குப் பெரிய ஏமாற்றமாகத்தான் இருக்கிறது… ஆனால் இதுதான் உலக நிலை….

பிறகு சினிமா காரன் நம்மை ஆள்கிறான் என்று வீண் புலம்பலால் என்ன பயன்…?

ஆகஸ்ட் 4ந் தேதி ஒரு கட்டுரையை எழுதினேன்.. தையலை உயர்வு செய்கிறாயோ இல்லையோ காப்பாற்று.. என்கிற தலைப்பில்…    உண்மையில் மனம் வெதும்பிப் போய் எழுதியக் கட்டுரை அது... ஆனால்  அதை படித்தது வெறும் 42 நபர்கள்தான்…  அது அந்தளவிற்கு முக்கயத்துவம் வாய்ந்தது இல்லை என்று சொல்ல முடியாது.. காரணம் அடுத்த நாளே அதாவது 5ந் தேதி “தந்தி“ தொலைக்காட்சியில் இதே காரணத்தை வைத்து விவாதம் நடந்தது… விவாதத்திலும் நான் கட்டுரையில் கூறியதுதான் பேசப்பட்டது… பேராசிரியர் அருணன் சிபிஎம், விசிக வன்னியரசு, பாமக பாலு, பாஜக வானதி போன்றவர்கள் பேசினார்கள்…  அதற்கு முன்பே நான் எழுதிய கட்டுரையை முக்கியத்துவமானதில்லை என்பது எப்படி சரியாகும்.. நான் இதுவரை எழுதிய 200 கட்டுரைகளில் மிகக் குறைவாகப் படிக்கப்பட்டது இதுதான் என்கிற போது வேதனையாக உள்ளது..

தமிழ்மணத்தில் பதிவேற்றியதில் சற்று காலதாமதமாகியதைப் பார்த்தேன்.. ஒரு வேளை தொழிற்நுட்பக் கோளாறால் நடந்ததா ….? தெரியவில்லை..

உன்னுடைய கட்டுரையைப் படிக்க வேண்டும் என்கிற தலையெழுத்து எங்களுக்குக் கிடையாது என்று கூறலாம்.. ஆனால் இதைப் போன்ற பல சமூக பிரச்சனைகளை நான் எழுதிய போது அதை 400 முறைகளும் சினிமா பற்றி எழுதினால் அதை 1000க்கும் மேலும் படிக்கிறார்களே... 

தீதும் நன்றும் பிறர் தர வாரா….. ஆக பிரச்சனை நம்மிடம்தான் உள்ளது.. 


கருத்துகள் இல்லை :