வெள்ளி, 16 மார்ச், 2018

ஸ்டீபன் ஹாக்கிங்...

ஸ்டீபன் ஹாக்கிங்  பற்றி சொல்லாமலும் அன்னாருக்கு அஞ்சலி செலுத்தாமல் இருந்தால் நான் நேசிக்கும் கொள்கைக்கு  விரோதமாக போகும் … அன்னாரை பற்றி எத்தனையோ கட்டுரைகள் வெளி வந்த வண்ணம் உள்ளன ...   அவற்றில் நான் படித்த சில விஷயங்கள்...
                                                                                                                                                              இங்கிலாந்தில் 1942-ல் ஜனவரி 8-ம் தேதி ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்தார். ‘கலீலியோ இறந்து சரியாக 300 ஆண்டுகள் கழித்து’ என்று ஹாக்கிங் சொல்லிக்கொள்ள விரும்புவார். பள்ளிப் படிப்பில் ஹாக்கிங் சராசரியான மாணவராகவே இருந்தார். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபோது கணிதமும் இயற்பியலும் மிகவும் எளிமையாக இருந்ததால் ‘பிரபஞ்சவியல்’ அவருடைய ஆர்வத்தை ஈர்த்தது. ஏனென்றால், “இந்தப் பிரபஞ்சம் எதிலிருந்து தோன்றியது என்ற பெருங்கேள்விக்கு ‘பிரபஞ்சவியல்’ தானே விடை தேடுகிறது” என்றார் ஹாக்கிங்.

                                                                                                                                                      


ஆல்பெர்ட் ஐன்ஸ்டைனுக்குப் பிறகு, பொதுமக்களின் சிந்தையை ஸ்டீபன் ஹாக்கிங் அளவுக்குக் கொள்ளை கொண்ட, உலகெங்கும் கோடானு கோடி மக்களால் நேசிக்கப்பட்ட வேறொரு அறிவியலாளரை நம்மால் காண முடியாது” என்கிறார் கோட்பாட்டு இயற்பியலாளர் மிஷியோ காக்கு.



இந்தப் புகழை ‘காலத்தின் சுருக்கமான வரலாறு: பெருவெடிப்பிலிருந்து கருந்துளைகள் வரை’ (எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்: ஃப்ரம் பிக் பேங் டு ப்ளாக் ஹோல்ஸ்’) என்ற 1988-ல் வெளியான நூலின் மூலம் ஹாக்கிங் பெற்றார். இதுவரை ஒரு கோடி பிரதிகளுக்கும் மேல் அந்த நூல் விற்றிருக்கிறது.



1982-ல் ‘பிரிட்டிஷ் பேரரசின் கமாண்டர்’ என்ற கௌரவப் பதவி ஹாக்கிங்குக்கு அளிக்கப்பட்டது. 2012, லண்டனில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க நிகழ்வின் நாயகர் ஹாக்கிங்தான். அவருக்கு அளிக்கப்படாத ஒரே ஒரு கௌரவம் நோபல் பரிசுதான். அதைப் பற்றியும் கனக்கச்சிதமாக ஹாக்கிங் இப்படிச் சொன்னார், “ஆராய்ந்து பார்த்து உறுதிசெய்யப்பட்ட கோட்பாட்டியல் பணிகளுக்குத்தான் நோபல் பரிசு வழங்கப்படு கிறது. நான் எந்த விஷயம் குறித்துக் கோட்பாடுகளை உருவாக்கினேனோ அதை ஆராய்ந்து பார்ப்பது மிக மிகக் கடினம்!”



மனித குலம் நீடிப்பதற்கு விண்வெளி ஆராய்ச்சி மிகவும் முக்கியம் என்றார் ஹாக்கிங். “உலகளாவிய அணுஆயுதப் போர், மரபணுத் தொழில்நுட்பம் மூலம் வடிவமைக்கப்பட்ட வைரஸ், இன்னும் நாம் கற்பனையே செய்திராத ஆபத்துகள் போன்றவற்றால் ஏற்படும் பேரழிவால் பூமியில் உயிர்வாழ்க்கைத் துடைத்தழிக்கப்படுவதற்கான சாத்தியம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது” என்று ஹாக்கிங் 2007-ல் கூறினார்.

கடவுளையும் மதத்தையும் பற்றி ஹாக்கிங் கூறியவை பெரும் எதிர்ப்பையும் சர்ச்சையையும் கிளப்பிவிட்டன. பிரபஞ்சத்தின் உருவாக்கத்தைப் பற்றி விளக்குவதற்கு இந்தப் பிரபஞ்சத்தின் வெளியில் உள்ள, கடவுள் போன்ற எதன் உதவியையும் நாட வேண்டிய அவசியம் இல்லை என்றார் ஹாக்கிங்.

‘தி கார்டியன்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஹாக்கிங் இப்படிச் சொன்னார், “மனித மூளையைக் கணினியைப் போலவே நான் கருதுகிறேன். அதன் அங்கங்கள் எல்லாம் வேலையை நிறுத்திக்கொள்ளும் போது அதுவும் (மூளை) வேலையை நிறுத்திக்கொள்ளும். முற்றிலும் பழுதுபட்டு இயக்கம் நின்றுபோன கணினிக்கு சொர்க்கமோ அடுத்த பிறவியோ கிடையாது. சொர்க்கம், அடுத்த பிறவி என்ற கதையெல்லாம் இருட்டைப் பார்த்துப் பயப்படுபவர்களுடையது.’

தன் வாழ்நாளின் கணிசமான பகுதியைக் கருந்துளை களையும் பிரபஞ்சப் பேரழிவையும் ஆராய்வதற்காகச் செலவிட்ட ஹாக்கிங்குக்கு இருட்டைப் பார்த்துப் பயம் கிடையாது. அவர் சொன்னார், “கருந்துளைகள் என்ற பெயரை அவற்றுக்கு வைத்திருப்பதற்குக் காரணம், தாங்கள் அழிக்கப்படுவதைக் குறித்தும் ஏதோ ஒன்றால் தாங்கள் விழுங்கப்படுவது குறித்தும் மனிதர்கள் கொண்டிருக்கும் அச்சம்தான். கருந்துளைகளுக்குள் எறியப் படுவது குறித்து எனக்குப் பயமேதும் கிடையாது. அவற்றை நான் புரிந்துகொண்டிருக்கிறேன். ஒரு வகையில் அவற்றின் எஜமானனாக நான் என்னை உணர்கிறேன்!”

நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலியே அவர் எழுதிய புத்தகத்தை வாசிப்பது மட்டுமே என நான் நம்புகிறேன்…
வாழ்க ஸ்டீபன் ஹாக்கிங் நாமம்!
 வளர்க அவர் கண்டுபிடித்த அறிவியல் வழி!





x

கருத்துகள் இல்லை :