வெள்ளி, 10 ஜனவரி, 2014

ஆம் ஆத்மிகள் உதயம் எதைக் காட்டுகிறது?

நாடெங்கும் புற்றீசல் போல கட்சிகள் அவரவர் அபிலாஷைகளுக்கு ஏற்ப உதயமாவது சகஜம்தான்.. சில காலங்கள் தாக்குபிடிப்பதும் நீர்க் குழிகள் போல உடைவதும் நாம் காணும் காட்சிகள்தான்.. ஆனால் சமீபத்தில் உருவான ஆம்ஆத்மி கட்சியை அப்படி எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது என்று டெல்லி தேர்தலில் தன்னை நிரூபித்திருக்கிறது..

அந்தக் கட்சியின் இத்தனை செல்வாக்கு மிகவும் ஆச்சரியகரமானது என்றும் அதுவும் அவர்கள் கட்சியில் மக்களை  கவர்ந்திழுக்கும் திரை நட்சத்திரங்கள் (Charisma) எவரும் இல்லாமல் இத்தனை செல்வாக்கு எப்படி என்று சில பத்திரிகைகளில் படிக்கும் போது சில எண்ணங்கள் தோன்றுகின்றன.

முதலில் ஆம் ஆத்மியின் உருவாக்கம் ஏன்..? ஆம் ஆத்மிகள் என்றால் தமிழில் சாதாரண பாமர மனிதன் என்று பொருள். இந்த பாமரக் கட்சியின் ஸ்தாபகர் திருவாளர் அர்விந்த் கேஜ்ரிவால். அவர் ஒரு முன்னாள் இந்திய அரசு வருவாய் பணியாளர். அதாவது IRS.  அது மட்டுமல்ல அவர் மனைவியும் ஒரு IRS அதிகாரி.. கேஜ்ரிவால் உயர்நடுத்தர பிரிவைச் சேர்ந்த குடும்பப் பின்னணி கொண்டவர்... வேறு வார்த்தையில் செல்வந்தர்தான்... மேலும் இவர் குடும்பம் பெரும் படிப்பாளி குடும்பம். கேஜ்ரிவால் ஒரு IIT-ian.. அவரைத்  தொடர்ந்து வரும் கட்சியின் இன்னொரு பெரும்புள்ளி திருவாளர் பிரஷாந்த பூஷன்.. இவர் தந்தையார் சாந்தி பூஷன்.  தந்தையும் மகனும் சுப்ரீம் கோர்ட்டின் பிரசித்தி பெற்ற வழக்கறிஞர்கள்.. மேலும் மெர்ராஜி தேசாயின் அமைச்சரவையில் மந்திரியாக இருந்தவர் சாந்திபூஷன்... ஆக அர்விந்தும் பிரஷாந்தும் வளமையான குடும்பப் பிண்ணனியுடன் உள்ளவர்கள்..  இவர்கள் தன்னை ஆம் ஆத்மிகள்  (பாமர மனிதர்களாம்) என்று சொல்லிக் கொள்கிறார்கள்.....

அதைப் போலவே மேலும்  கட்சியின் முக்கிய புள்ளிகள் குமார் விஸ்வாஸ்- பிறப்பால் பிராமணரான இவர் இந்தி மொழிப் பண்டிதர்.. உலகெங்கும் பறந்து சென்று கவி பாடுபவர் ஷாசியா இல்மி -பிறப்பால் முஸ்லிம் பெரும் செல்வந்த பின்னணி கொண்டவர்..

ஆக இப்படி பட்டவர்கள் தொடங்கியதுதான் ஆம் ஆத்மி என்கிற பாமர மனிதனின் கட்சி..

இவர்கள் தொடக்கப் புள்ளி  அன்னா அசாரேயின் தலைமையில் உருவான ஊழலுக்கு எதிரான இந்தியா மற்றும்  ஜன் லோக்பால் மசோதா நிறைவேற்ற நோக்கம் கொண்ட நடுத்த வர்க்க மக்களின் எழுச்சியில் பெரும் களப்பணியாற்றியதுதான்..

மக்களால் அதிலும் குறிப்பாக படித்த நடுத்தர வர்க்க மக்கள் அதிக வெறுப்புக்கும் விரக்திக்கும் உள்ளாகும் விஷயங்கள் எவை?  நாடெங்கும் நடக்கும் லஞ்ச லாவண்யங்கள் அதிகார வர்க்க முறைகேடுகள் அரசியல் தலைவர்களின் ஊதாரித்தனம்  சாதீய மத வன்முறைகள் பணம் பதவிக்கான சண்டைகள் கொலைபாதகங்கள் தீவிரவாத தாக்குதல் காரணமான  பயங்கள்  ஒரு புறம் இன்னொரு புறம் முதலாளிகள் வியாபாரிகளின் கள்ள மார்க்கெட், பதுக்கல், அதிக லாபத்திற்காக பேராசை,  விலைவாசி உயர்ந்து கொண்டேசெல்வது  ஆகியவைதான்..

நாட்டை ஆண்ட/ஆளும் கட்சிகள் இவற்றை தடுக்க இயலாமல் அவர்களே இதில் ஈடுபடுவதைப் பார்க்க  சகிக்காத மக்கள் கூட்டம் இவற்றை தடுக்க ஒழிக்க முடியாமல் கையறு நிலையில் இருந்த போது, மெல்லிய நம்பிக்கை
நட்சத்திரமாக உருவானதுதான் மேற்படி அன்னா அசாரேயின் இயக்கம்.. அந்த இயக்கத்தில் மின்னணு ஊடகங்களான facebook twitter போன்றவை பெரும் களப்பணி ஆற்றின.. தமிழகத்தில் குறிப்பாக சென்னையிலும் அதன் தாக்கம்
அதிகமாகத் தெரிந்தது..

ஆனால் அன்னாவால் தொடர்ச்சியான போராட்ட வடிவங்களை மேன்மேலும் கொண்டு செல்ல இயலாமல் தேங்கிப் போனது..  அதற்கு காரணம் இந்த மிடில்கிளாஸ் மாதவன்களை நம்பி நடக்கும் விஷயங்களே அப்படித்தான் போய் முடியும் என்ற கடும்  விமர்சனம் எழுந்தது. வினவு போன்ற தீவிர இடதுசாரித் தளங்கள் அவ்வாறு கடும் குற்றச்சாட்டைக் கூறி எள்ளி  நகையாடியது..

ஆனால் ஒரு இயக்கம் அதுவும் பெரும் மக்கள் கூட்டத்தை தன்னகத்தே ஈர்த்த இயக்கம் அவ்வாறு நின்று போய்விடுமா..?  அதிலும் அதில் தீவிர களப்பணியாற்றியவர்கள் அத்துடன் நின்று போய்விடுவார்களா...? அர்விந்த் பிரஷாந்த் பூஷன் போன்றவர்கள்  அதை ஒரு அரசியல் இயக்கமாக மாற்றினார்கள் அதுதான் ஆம் ஆத்மி... (அன்னாவின் இயக்கம் ஒரு கட்டத்தில்
தொய்வடையும் போது ஒரு காந்திய இயக்கம் அப்படித்தான் தன்னை தொகுத்துக் கொண்டும் புதுப்பித்துக் கொண்டும் மேன்மேலும் செல்லும் என்றார் ஜெயமோகன்).

துடைப்பம் சின்னத்தை கொண்டு டெல்லியில் சூறாவளிப் பிரச்சாரம் செய்து மும்முனைப் போட்டியில் காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி 70 இடங்களில் 28யை பிடித்து சாதனை செய்தார்கள் ஆம் ஆத்மி கட்சியினர்.. இத்தனைக்கும்  கட்சிக் கொடி கூட கிடையாது.. பெரும்பான்மைக்கான 36 இடங்கள் கிடைக்காது போன BJP தான் ஆட்சி அமைக்க மாட்டேன் எனச் சொல்ல ஆம் ஆத்மியின் பரபரப்பான தேர்தல்  அறிக்கையை காரணம் காட்டி (காங். கட்சிக்கு  வேறு வழியில்லை என்பது வேறு விஷயம்)  அதை நிறைவேற்றி காட்டுங்கள் என்று காங் தன் MLAக்கள் ஆதரவு தர, கெஜ்ரிவால் டெல்லியின் முதல்வராக முதல்வன் பட பாணியில் ஆட்சியில் அமர்ந்தே விட்டார்..

அடுத்தது பாராளுமன்ற தேர்தல் களம்... யார் பிரதமர் என்பதால் அதிலும் ஆம் ஆத்மிக்கள் சாதனை படைப்பார்கள் என்ற பரபரப்பு நாடெங்கும் தொற்றிக் கொண்டிருக்கிறது... அதிலும் குறிப்பாக நடுத்தர வர்க்க மக்களிடம்... 

அதன் தொடர்ச்சியாக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கேப்டன் கோபிநாத்  ஆம் ஆத்மியில் சேர்ந்திருக்கிறார்..யார் இந்த கோபிநாத்..? AIR DECCAN என்கிற முன்னாள் low fare விமான நிறுவனத்தை நடத்திய அதிபர்.. (அது தற்போது கிங் பிஷராக மாறி விஜய் மல்லையா என்கிற பெரு முதலாளியிடம் சென்றுவிட்டது)..(மேலே சொன்ன சமூக சீர்க்கேட்டினால் சாமான்யன் மட்டுமல்ல.. கோபிநாத்தை போன்ற முதலாளிகளும் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பது உண்மை என்றாலும் ஆம் ஆத்மியின் வெற்றியைப் பார்த்ததும் இவரைப் போன்றவர்கள் வரத் தொடங்குகிறார்களா என்ற சந்தேகமும் வரத்தான் செய்கின்றன)

ஆக இனி கோபிநாத்தைப் போன்ற பலர் குறிப்பாக முன்னாள் சிறு குறு முதலாளிகள் அரசு உயர் அதிகாரிகள் போன்றவர்கள் ஆம் ஆத்மிகளாக மாற வாய்ப்புள்ளது.. ஆம் ஆத்மி கட்சியோ ”சமுதாயத்தில் தூயவர்களாக யார் இருந்தாலும் அவர் முதலாளியோ ஆட்டோ ஓட்டுனரோ எங்களுடன் இணையுங்கள்” என்று அறைகூவல் விடுக்கிறது.. எல்லாம் சரிதான்.. ஒரு AIR DECCANகோபிநாத்தும் நம்மவூர் ஆட்டோ டிரைவர் கோபிநாத்தும் ஒரே கட்சியில் ஒரே தராசுத் தட்டில் ஈடாவார்களா ? வர்க்க பேதம் எப்படியும் இடிக்குமே..? போன்ற கேள்விகள் எழுந்து கொண்டேயிருக்கும்தான்..

கம்யூனிஸ்டுகள் தங்களுக்கென்று கொள்கை வைத்திருக்கிறார்கள்... உழைக்கும் மக்கள்  நலம் என்று..... திராவிட இயக்கங்கள் பிற்படுத்தப் பட்ட மக்கள் நலம் என்கிறார்கள்.. தலித்துகள் தலித் நலம் என்கிறார்கள் அதே போல மத ரீதியான இயக்கங்கள் தத்தம் மதத்தையே தங்கள் கொள்கையாக கொண்டிருக்கிறார்கள்.. ஆனால் ஆம் ஆத்மிக்கள் கொள்கை  ”ஊழல் ஒழிப்பு நல்ல நிர்வாகம்” என்பதையே கொள்கையாக அறிவித்துவிட்டார்கள் ஆக இந்தியாவில் அதற்கே பஞ்சம் வந்துவிட்டது...

சர்வ ரோக நிவாரணத்திற்கு கம்யூனிசமே தீர்வு என்று நானும் நினைத்துக் கொண்டுதான் இருந்தேன்.. ஆனால் கம்யூனிஸ்டுகளால் கேரளா மேற்கு வங்கம் திரிபுரா ஆகிய வற்றைத் தவிர இத்தனை காலமாக எங்குமே தலையெடுக்க  முடியவில்லையே.. மேற்படி மாநிலத்தில் அவர்கள் செல்வாக்கு  அநதந்த மாநில மக்களின் இயல்பான வர்க்க உணர்வு  மிக்கவர் என்பதால்தான்  அதுவும் சாத்தியமாயிற்று...

அதனால் எங்கெங்கு கம்யூனிஸ்டுகள் கோட்டை விடுகிறார்களோ.. அங்கே ஆம் ஆத்மிகள் அந்த வெற்றிடத்தை சரியாக மிகச் சரியாக நிரப்புவார்கள் என்பதையே இந்த நிகழ்வு நமக்கு எடுத்துரைக்கிறது..

4 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

neengal aam aadmi edir kaala nakshthira katchi endru oppukolkireergala.. adarku vote poduvingala....

K Gopaalan சொன்னது…

நகர்ப்புறங்கள் தவிர மற்ற் இடங்களில் ஆம் ஆத்மி சீட் பிடிப்பது கடினம்தான். கிராமப்புற மக்கள் ஊழலைப்பற்றி அதிகம் நினைப்பதில்லை. தவிரவும் சாதி வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போட்டுப் பழகிவிட்டார்கள்.

சரி, படிததவர்கள் ஓரளவு உள்ள தமிழகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நடந்த இடைத் தேர்தல்களில் இந்த அளவு எண்ணிக்கையில் ஓட்டு பெற ஆளும் கட்சி என்ன சாதனை செய்தது. இரு கட்சியினரும் மற்றவர் பணம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டியதைக் கேட்டும் 49 ஓ வுக்கு ஓட்டளித்தவர்கள் தற்போது 5000 பேர் மட்டுமே. எங்கே மக்கள் படிப்பறிவு. In our Country Voter is a Tradable Commodity.

இந்தியாவைப் பொறுத்தவரை நேர்மை மிக்கவர்களைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி இப்போது ஒரு காற்று போன பலூன்.

ஆம் ஆத்மி கட்சிக்கும் அது நிகழலாம்.


கே. கோபாலன்

Badri Nath சொன்னது…

வருகைக்கு நன்றி அனானி .. கணினி வேலை செய்யவில்லை அதனால் தாமதமாக பதில்.. வருந்துகிறேன்.. சரி.. நான் AAP க்கு ஓட்டுப் போடுவேனா இல்லையா என்பதல்ல கேள்வி.. ஆப் கட்சியினர் தான் பத்தோடு பதினொன்று என்று எடுத்துக் கொள்ள முடியாது என்பதை நிரூபித்திருக்கிறார்கள் என்பதே எனது துணிபு.. எதிர்காலம் எப்படி என்று கணித்து சொல்ல இது சோதிடம் அன்று.. அவர்கள் பிரச்சனையை கையாளும் விதம் ஆகியவற்றை வைத்துத்தான் கூற முடியும் அது வரை keeping our fingers crossed என்பதே எனது நிலைபாடு

Badri Nath சொன்னது…

வருகைக்கு நன்றி கோபாலன்.. கணினியில் சற்று பழுது.. தாமதமாக பதில் எழுதுவதற்கு வருந்துகிறேன்.. நீங்கள் கூறிய சில கருத்துக்கள் எனக்கு ஏற்புடையதே... சாதீய ஓட்டு வங்கி.. ஆப் கட்சியினரின் நகர்புற சார்பு நிலை போன்றவை ஓக்கேதான்... ஆனால் எனக்கு வருங்காலத்தின் மீது (சரியோ தவறோ) ஒரு நம்பிக்கை வைத்துக் கொண்டுதான் எதையும் பார்க்கிறேன்.. நமது பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் நம்மைக் காட்டிலும் smart ஆக இருப்பார்கள் என்றே நம்புகிறேன்.. அப்போது கணக்குகள் மாறலாம்... தற்போது ”ஆப்” பை பொருத்த வரை மேற் சொன்ன keeping our fingers crossed நிலைபாடுதான்.. நன்றி