வெள்ளி, 31 ஜனவரி, 2014

பயணங்கள் முடிவதில்லை....

இந்த அரசியல்,  சமூகம் போன்றவற்றைவிட்டால் உங்களுக்கு எழுதவே வராதா என்கிறார் என் மனைவி... சரி.. தற்போது அதை விடுத்து வேறு விஷயங்கள் கிடையாதா..? என்றால் இருக்கிறது..

அதுதான் நமக்கு ஏற்படும் அனுபவம்.. அவற்றைப் பற்றிப் பார்க்கலாமே...

உதாரணத்திற்கு பயண அனுபவம்...எப்போதும் இறக்கைக் கட்டி உலகமெங்கும் பறக்கும் நவீன இந்தியன் பற்றிய பதிவு இது இல்லை.. மாறாக சாதாரண இந்தியனின் பயணப் பதிவு... விஷயத்திற்கு வருகிறேன்..... நமது சமூக (மீண்டும் சமூகம்) வாழ்க்கையில் நம்மால் புறந்தள்ள இயலாத ஒரு சமாச்சாரம்  பயணம்... கடந்த எட்டு நாட்களில் தொடர்ச்சியாக ஆறு நாட்கள் ரயிலில் பயணிக்க வேண்டியிருந்தது.. இரண்டு நாட்கள்தான் வீட்டில் இருக்க முடிந்தது.. இரவு பயணம் மூன்று.. பகல் நேரப் பயணம்  மூன்று... இவற்றில் ஒரு பகல் பயணம் மட்டும் ஏசி வசதியுடன்... மற்றவை நான்-ஏசி சாதாரண வகுப்புப் பயணங்கள்.. 

 இரவு சாதாரண வகுப்பு பெட்டியில் பயணம் பற்றி எனது கருத்துக்கள்.. நான் சென்ற மூன்று ரயில்களில் இரண்டு ரயில்கள் மோசமான பராமரிப்புதான்.. ஒரு பயணத்தில் பல் துலக்கக் கூட தண்ணீர் வரவில்லை... சௌசாலயம் (அதாங்க பாத்ரூம்) படு மோசமாக ’கப்பு’டன் வரவேற்கிறது.. அதிலும்  பராமரிப்பு பூஜ்யம்... ஒரு காலத்தில் தென்னக ரயில்கள் படு சுத்தமாக இருந்தது.. தற்போது நிலைமை மாறிவிட்டது.. நாமும் வடக்கு  பக்கம் சாய்ந்து விட்டோம்... சில வருடங்களுக்கு முன்பு பஞ்சாபிலிருந்து டெல்லிக்கு சாதாரண வகுப்பு ஸ்லீப்பரில் பயணிக்க நேர்ந்தது.. அப்பப்பா.. அதற்கு பதில் எனக்குத் தூக்கு தண்டனையே கொடுத்துவிடலாம் போலிருந்தது... தென்னகம் இன்னமும் அப்படி ஆகவில்லைதான்.. ஆனால் நிலைமை தற்போது கவலைக்கிடமாக ஆகிக் கொண்டிருந்தது... சரி.. அதுதான் அப்படி என்றால் காலை வேளைப் பயணம்.. அய்யா.. இரயில்வே நிர்வாகமே.. உங்களுக்கு சற்றாவது மனசாட்சி இருந்தால் இரண்டு பேர் அமரும் இருக்கையில் மூன்று பேரை அமர வைத்து கல்லா கட்டுவது அவசியமா...? இந்தியாவில் என்ன அனைவருமா ’ஊசி’போல உடம்பை  வைத்திருக்கின்றோம்... சராசரி ’குண்டை’க் காட்டிலும் சற்றே அதிகமாக யாராவது வந்தால், அதோடு செத்தோம்.. அதற்கு பதில் நின்று கொண்டே வந்துவிடலாம்... உண்மையில் நான் பல மணிநேரம் நின்றே பயணித்தேன்.. உட்கார்ந்தால் ’எட்ஜ்’  சீட் மட்டுமே உத்தரவாதம்.. 

இது ஒரு புறம்... அந்த பெட்டிகளில் உணவுப் பண்டம் விற்பனைக்கு காண்ட்ராக்டர் எடுத்தவர், தன்னைத் தவிர வேறு யாரையும் எந்த உணவுப் பொருட்கள் விற்க அனுமதிக்கவில்லை.. ஒரு மூதாட்டி கடலை விற்க வந்தார்.. உடனே அந்த காண்ட்ராக்டர் அவர் பையை பிடுங்கி வைத்துக் கொள்ள அந்த மூதாட்டி குய்யோ  முறையோ என்று கூக்குரலிட, நாங்கள் சமாதானம் செய்து பார்த்தோம்.. ”சார்.. எங்க லாபத்த நீங்களா கொடுப்பிங்க...” என்று  மறுத்துவிட்டார்.. அந்த காண்டராக்டரைத் தொடர்ந்து கெஞ்சிக் கொண்டே சென்ற  மூதாட்டியைப் பார்க்க  பாவமாக இருந்தது...

சரி தற்போது முடிவுரை.. இதனால் எனக்குத் தெரிந்தது... குளிர்பதனமில்லாத சாதாரண வகுப்பைக் காட்டிலும் சேலத்திலிருந்து சென்னை வந்த அந்த ஏசி வண்டி.. அடாடா.. உண்மையில் சொர்க்க லோகம்தான்..நன்றாகவும் பராமரிக்கிறார்கள்..  ஏறியதும் தெரிவில்லை.. இறங்கியதும் தெரியவில்லை.. குடும்பத்தாருடன் அமைதியாகப் பேசிக் கொண்டு  அசதிக்காக சற்று படுத்துக் கொண்டு...ஒரு ப்ளசண்ட் அனுபவம்.. ஆக எனது ஓட்டு ஏசிக்கே..  ரயில்வேத் துறையும் மத்திய அரசும் சற்றே பரந்த மனத்துடன் ஏசி வகுப்பின் விலையைக் குறைத்துக் கொள்ளலாம்.. பலருக்கு அனுகூலமாக இருக்கும்.. மனம் வைப்பார்களா...?

(அதைப் போல நீண்ட பயணம் மேற்கொள்ள வந்தால் விமானப் பயணம் அல்லது II ஏசிப் பயணம் சாலச் சிறந்தது  என்பதும் எனது முடிவான கருத்து)

4 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பல அவசர பயணங்களால் செல்வது மிகச் சாதாரண வகுப்பு பெட்டி... (Unreserved) சாதாரண வகுப்பு பெட்டி எவ்வளவோ மேல்... அதை விட பணம் கையிருப்பை பொறுத்து எதுவுமே சாலச் சிறந்தது...

ராஜி சொன்னது…

எனக்கு ரயில் பயணம் எட்டாக்கனி!!!

silanerangalil sila karuththukkal சொன்னது…

நன்றி தனபாலன்...அதெப்படி Unreserved பயணம் என்கிறீர்கள்... தற்போது வட மாநிலத் தொழீலாளக்ளால் நிறம்பி வழீயும் பெட்டிகளில் காலே வைக்க முடியவில்லையே...

silanerangalil sila karuththukkal சொன்னது…

நன்றி ராஜி அவர்களே... சத்தியமாக நீங்கள் கூறுவதை நம்பவே முடியவில்லை