திங்கள், 21 அக்டோபர், 2013

மெட்ராஸ் கஃபே பற்றி கமலின் கருத்து...

”தெனாலி படத்தின் அடிநாதம் இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் பற்றியதாகும்..நான் அதைப் பூடகமாகச் சொன்னேன், மெட்ராஸ் கஃபே படம் அதன் ஒரு பக்கத்தை மட்டும் சொன்னது. நானே அதன் இன்னொரு பக்கத்தை பற்றி ஒரு படம் எடுக்க முயன்றாலும் அதற்கு எனக்கு அனுமதி கிடையாது.
 அவ்வளவு ஏன் இலங்கைப் பிரச்சனையைப் பற்றி ஒரு படமும்  எடுக்க முயல முடியாது. இங்கே கருத்துரிமை கிடையாது.  ஜெயகாந்தன் பெரியார் காலத்தில் அவர்கள் அனுபவித்த கருத்துச் சுதந்திரம் தற்போது ஒரு கலைஞனான எனக்கு கிடையாது...”
என்று கமல் ஃப்ரண்ட் லைனில் பேட்டி கொடுத்துள்ளார்.. 

கமல் சொல்வதில் உண்மை இருப்பதைப் போலத்தான் உணர்கிறேன்.  காரணம் நம் நாட்டு நடப்பு அப்படி. பெரியார் காலத்தில் இருந்த கருத்துரிமை தற்போது கணிசமாகக் குறைந்து போயிருக்கிறது. TOLERANCE என்பது கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து வருகிறது.  ஊடக வளர்ச்சி ஒருபுறம் அசுரத்தனமாக வளர்ந்து வரும் இந்தக் காலகட்டத்தில் கருத்துரிமை அதற்கு எதிரான திசையில் செல்கிறது என்பது கசப்பான உண்மை.  

சரி இப்போது பிரச்சனைக்கு வருவோம்..  மெட்ராஸ் கஃபே படம் தமிழ்நாட்டில் வெளியிட தடை இல்லாவிட்டாலும் எங்கும் வெளியாகவில்லை.  இதுவே ஒரு தவறான முன்னுதாரணமாக நினைக்கிறேன்.. அந்தப் படத்தில் அப்படி ஆட்சேபகரமான கருத்துக்கள் இல்லை.  ராஜீவ் கொலையைப் பற்றிப் பேசுகிறது அந்தப் படம்.  உண்மையில் R A W என்கிற அமைப்பில் உள்ள குறைபாடுகளைத்தான் கடுமையாக விமர்சித்து படம் எடுத்திருக்கிறார்கள். அந்நிறுவனத்தில்  உயர் அதிகாரி (தமிழர்) பணத்திற்காக சோரம் போவதாகக் காட்டியிருக்கிறார்கள். அவரைப் போன்ற அதிகாரிகளின் மெத்தனத்தால் ராஜீவ் கொலையாகக்கூடிய சோகம் நிகழ்வதாகக் கூட அநத்ப் படம் எடுத்துச் சொல்கிறது. உண்மையில் எந்த ஒரு நாட்டை சேர்ந்தவனும், தன் நாட்டின் பிரதமராகக் கூடியவர் படுகொலை செய்யப் பட்டால்  அநத்ச் சோகத்தை ஒரு படைப்பாளி ஒரு படமாகவோ ஒரு புத்தகமாக ஆக்கம் செய்வது சகஜம்தானே..  அப்படி செய்யக் கூடாது என்பது எந்த விதத்தில் சரி என்று தெரியவில்லை என்றாலும் அந்தப் படம் கமல் சொல்வதைப் போல் ஒரு பக்கத்தைப் மட்டும் பேசுகிறது.. ராஜீவ் படுகொலை என்பது எத்தனை கொடூரமானது என்றாலும் அதற்கு சற்றும் குறைவில்லாத கொடூரமானதுதான் பல லட்சம் தமிழ் மக்கள் இந்தப் போரில் உயிர்இழந்தது...  ஆக  இந்தப் பிரச்சனையின் குறுக்கு வெட்டுத் தோற்றமாக ஒரு படத்தை இது வரை யாரும் எடுக்கவில்லை எடுக்கவும் முடியாது என்பதைத்தான் கமல் சொல்ல வருகிறார்  உண்மையில் இதுவும் எத்தனை பெரிய சோகம்..

இதைப் பற்றி வல்லுனர்கள் சனநாயகவாதிகள்தான் பார்வைக்கு நாம் கொண்டு செல்லவேண்டும்...

கருத்துகள் இல்லை :