ஞாயிறு, 13 நவம்பர், 2016

சரியா தவறா..?

500 /1000 ரூபாய் விவகாரம் விஸ்வரூபமெடுத்து நிற்கிறது… சரியா தவறா என்கிற விவாதம்  பெருமளவில் காட்சி ஊடகங்களில் பேச்சுப் பொருளாக நடைபெற்று வருகிறது..

இதை எதிர்ப்பவர்கள் பெரும்பாலும் இடதுசாரிகள்.. அதிலும் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாட்டாளர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்… பொதுவாக இடதுசாரிகள் எதிர்க்கிறார்கள் என்றால் சாதாரண சாமானிய மக்கள் பிரச்சனையில் இருந்தால்தான் அதிகம் குரல் கொடுப்பார்கள்.. இந்தப் பிரச்சனையில் மக்கள் திணறுவது உண்மைதான் என்றாலும் அது மட்டுமே இடதுகளின் பதற்றத்திற்கு காரணமா என்று தெரியவில்லை…  மக்களைப் பொருத்தவரை அவர்கள் ஏதோ 500 1000 ரூபாய் புழக்கத்தில் இருந்த போது சுபிட்சமாக இருந்ததைப் போலவும் தற்போது பிரச்சனையில் இருப்பதைப் போலவும் இடதுசாரிகள் காட்சிப் படுத்துகிறார்களோ என்று தோன்றுகிறது.. மக்களைப் பொருத்தவரை என்றோ தலைக்கு மேல் வெள்ளம்  போன கதைதான்… பத்து பிரச்சனைகளுடன் இது பதினொன்று.. அவ்வளவுதான்…

 இடதுசாரிகள் குரலில் ஒரு பதற்றம் வேறு பார்க்க நேர்கிறது… காரணம் ஒரு வேளை  இந்தப் பிரச்சனையினால் பெருமளவு கள்ளப் பணமும் கருப்புப் பணமும் ஒழிக்கப்பட்டால் மோடியின் இமேஜ் உயர்ந்துவிட காரணமாக ஆகிவிடுமோ என்கிற அச்சம் உள்ளது என்பதையும் சற்றே உணர முடிகிறது…  அரசியல் ரீதியில் மோடி போன்றோர் உயருவது இடதுசாரிகள் ஆபத்தாக கருதுகிறார்கள்… இதை புரிந்து கொள்ள முடிகிறது…

அவர்கள் வைக்கும் வாதம்
• ஏற்கனவே இதைப் போன்று மொரார்ஜி தேசாய் காலத்தில் ஒழித்திருக்கிறார்கள் அதனால் பயனென்றும் இல்லை
• அதானி அம்பானி என்ன க்யூவில் நிற்கிறானா
• அவர்கள் ஏற்கனவே டாலர்களாக சுவிஸ் வங்கியில் இதர அசையா சொத்துக்களாக உருவாக்கிவிட்டார்கள்.. அதனால் பயனென்றுமில்லை
• கார்ப்பரேட் வாரா கடன்கள் மீது எந்தவித நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்கிறார்கள்
• சாமான்ய மக்கள் தெருவில் அலைகிறார்கள்
போன்ற குற்றச் சாட்டுகள்தான் எதிர்பவர்களின் வாதமாக இருக்கிறது…

உண்மைதான்.. மொரார்ஜி தேசாய் காலத்தில் அவர்கள் ஒழித்தது 1000 ரூபாய் மற்றும் பத்தாயிரம் ரூபாய் நோட்டுகள்.. அது 1978 வாக்கில் அப்போது தற்போதுள்ள பெரும் வணிக செயல்பாடுகள் இல்லை.. பெரும் தொழில்கள் பெருகவில்லை.. சாதாரண சாமானிய மக்களிடம் அந்தவித பணப் புழக்கமே கிடையாது.. அவர்களிடம் அப்போது இருந்தது அதிக பட்ச பண மதிப்போ ரூ 100 மட்டும்தான்.. மேலும் அந்த காலகட்டத்தில் கள்ள நோட்டுகள் இந்த அளவிற்கு புழக்கத்தில்லாத  காலம்தான்…  ஆனால் இன்றோ சாதாரண காய்கறிகள் விற்பவர்கள்கூட ரூ 500 நோட்டை வைத்திருக்கிறார்கள்.. காரணம் மக்களிடம் காணப்படும் அதீத பணப்புழக்கம் என்றே கூற வேண்டும்..

தற்போதுள்ள நடவடிக்கை என்பது அதானி அம்பானியை பாதிக்கும் என்று யாரும் நம்பவில்லை.. அதற்கு வேறு திட்டம்தான் கொண்டு வரவேண்டும்.. அவ்வளவு ஏன் ஒரு இடது சாரி பிரதமராக வந்தால்கூட அவர்கள் மீது எந்தவித இம்மிளவு நடவடிக்கையை எடுத்துவிட முடியுமா…? மோடியை எடுக்கச் சொன்னால் அது நகைச்சுவையாகத்தான் பார்க்க வேண்டும்.. மேலும் கார்ப்பரேட் பெற்ற கடன்கள் போன்ற விவகாரத்துடன் தற்போதுள்ள நடவடிக்கை முடிச்சுப் போட இயலாது…

ஆக இந்த நடவடிக்கை எப்படிப் பார்ப்பது.. கள்ளப் பணம் கருப்புப் பணம் ஆகிவற்றின் மீது எடுக்கப்பட்ட ஒரு துணிச்சலான நடவடிக்கை என்பதற்கு மேல் ஏதுமில்லை.. இதனால் 100 சதவிகிதம் கள்ளப் பணமும் கருப்புப் பணமும் குறைந்துவிடும் என்பதும் சாத்தியிமில்லாதது.. ஆனால் அதை ஒழிப்பதற்கான முதல் அடி என்று வேண்டுமானாலும் கூறலாம்…

SBI வங்கியின் தலைவர் அருந்ததி அவர்கள் கூறுகிறார் இந்த நடவடிக்கையினால் ரூ 53000 கோடி டெபாசிட் வந்துள்ளதாகக் கூறுகிறார். சேலம் நகராட்சி ஒரு நாளில் ரூ 2 கோடிக்கு மேல் வரி பாக்கியை வசூலித்துள்ளது.. இவைகள் ஒரு பானை சோற்றுக்கு உதாரணம்தான்… ஒரே நாளில் 4 மணி நேரத்தில் கள்ளப் பண முழுவதும் ஒழிக்கப்பட்டதா இல்லையா என்பதற்கு  இடதுசாரிகளிடம்    பதிலில்லை..

இனி மேல் ரூ 2000 கள்ள நோட்டை அடிக்க வேண்டும் என்றால் காலதாமதமாகும் சாத்தியமும் குறைவு எனப்படுகிறது.. இது நிச்சயம் வெற்றிதானே.. வங்கியில் பணப்புழக்கம் அதிகமாகும் என்பதை எப்படி குற்றச்சாட்டாகப் பார்க்க முடியும்… மேலும் இங்கே அம்பானிகள் அதானிகள் மட்டுமா.. எத்தனை குட்டி அம்பானிகள் அதானிகள் அவர்களின் எடுபிடிகள் அரசியல்வாதிகள் கந்து வட்டிக்காரர்கள் சாராய முதலைகள் கல்வி வள்ளல்கள் ரியல் எஸ்டேட் ரவுடிகள் ஆகியோரிடம் உள்ள கருப்புப் பணம் முடிவுக்கு வந்திருக்குமே .. அதற்கான பதில் என்ன..

ஒட்டுமொத்தமாக நல்ல நடவடிக்கையின் ஒரு சிறு பாய்ச்சல் என்றே கூறவேண்டும்.. நிச்சயமாக மோடியின் பாஜகவிற்கும் காங்கிரஸ் என்கிற பூதாகார கட்சியின் செல்வாக்கை முறியடித்து நிற்கவும் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் பயனளிக்கும் என்றே கூறவேண்டும்…


ஆக அரசின் இந்த நடவடிக்கை ஆதரிக்கப்பட வேண்டிய நடவடிக்கை…

கருத்துகள் இல்லை :