வியாழன், 31 மே, 2018

என்னை நினைச்சு நானும் சிரிச்சேன்....

அடாடா என்ன ஆக்ரோஷம்... சமூக விரோதிகளைக் கண்டு..  நமக்கும்தான் ஆக்ரோஷம் வருகிறது...

 ''சும்மா  போராட்டம் போராட்டம்னு கம்பு சுத்தாதிங்கய்யா...''

''சரிங்க எசமான்....''

''மீத்தேன் எடுக்கறான்.'''

''. அட ... பாத்துக்கலாம்... போராடாத...''

''ஸ்டெர்லைட் ஆலையால கேன்சர் வருது... ''

''பாத்துக்கலாம்..  போராடாத...சமூக விரோதி பூச்சாண்டி..... சாக்கிரத....''

''காவிரியில தண்ணி தரமாட்டாங்கறான்... உச்ச நீதிமன்றத்
தீர்ப்பகூட மதிக்க மாட்டேங்கறான்...''

''சு... ஸ்....சும்மா... அதெல்லாம் போராடக் கூடாது .. பாத்துக்கலாம்...''..

என்னய்யா...போராட்டம் போராட்டம்னா... சினிமா பாக்க வேணாம்....உன் ஆசையெல்லாம் திரையில் பாத்துக்கோ...
தணிச்சுக்கோ....

கமல் இந்த விஷயத்தை நாசூக்கா சொல்றார்... அவர் நிறைய  விஷயம்  அறிஞ்சவர்.... இந்த ரசினி எல்லாத்தையும்  இப்படியா போட்டு உடைக்கிறது...

குழந்தைக்குப் பேச்சே வரலன்னு கவலப்பட்ட தகப்பனைப் பாத்து  அது  பேச ஆரம்பிச்ச முத வார்த்தை  '' அப்பா நீ எப்ப சாவேன்'னதாம்... அந்தக் கதயலால்ல இருக்கு...

இரண்டு பேரும் பிஜேபியால் மறைமுகமாகத் தூண்டப்பட்டவர்கள்னு   சிலர் சொன்ன  போது  அவங்களப் பாத்துச் சிரிச்சேன்...



இப்ப என்னைப் பாத்து நானே சிரிக்கிறேன்...

புதன், 23 மே, 2018

துப்பாக்கி .......



இது ஜனநாயக நாடா என்கிற அச்சம் வருகிறது...
 நெஞ்சை பதற வைக்கிறது அந்த 17 வயது சிறுமியின் புகைப்படம் ...

அந்த பெண் என்ன அப்படி கேட்டுவிட்டாள்.. கூலி உயர்வா..? அரசு பதவி விலகவா கேட்டாள்? இல்லை தனி நாடு கேட்டாளா? 

 என் மக்களுக்கு கேன்சர் வரும் ஒரு தொழிற்சாலை வேண்டாம் என்றால் அதற்கு பரிசா இது ?

என்ன நடந்தது என்பது மக்களின் பெரும் பகுதிக்கு  தெரிந்தே இருக்கிறது ... 

மக்களை ஆள்வது கார்பொரேட் கம்பெனிகள்  என்பது பச்சையாக பட்டவர்த்தனமாக அம்மணமாக தெரிகிறது... நிச்சயம் ஒரு மக்கள் நல அரசு என்பது என்ன என்பதை வெளிநாட்டில் போய் கற்றுக்கொள்ளட்டும் ஆள்வோர் ...

திங்கள், 7 மே, 2018

கிரௌஞ்ச வதம்

 நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம் வந்து இரண்டு நாட்களாக வேதனை விரக்தி கோபத்தின் உச்சத்திற்கே செல்ல வேண்டியிருக்கிறது


இப்படி ஒரு மத்திய அரசு  நிறுவனம் ஏழை ஜனங்களை மாணவர் செல்வங்களை பாடாய்ப்  படுத்துமா என்றே புரியவில்லை...  எந்த  நாட்டிலாவது இப்படி நடக்குமா..?


 தமிழர்கள்  என்றால் மாற்றாந்தாய் மனப்பான்மை என்று ஏற்கனவே புலம்பும்  ஒரு பிரிவின் வாதத்தை சரி என்று அரசே ஆக்க நினைக்கிறது என்று ஆகாதா ...?

பழி வாங்க வேண்டும் என்பதற்காக ஒரு அவலத்தை அரசு நிறுவனம் கட்டவிழ்த்து விடுமா ...?

NEET விவகாரத்தில் இந்த வருடம்  CBSE மற்றும் மத்திய அரசு   நடந்து கொண்ட விதம் ஒரு 

கிரௌஞ்ச வதம் 

செவ்வாய், 24 ஏப்ரல், 2018

ஆண்களை நெறிப்படுத்துக....

 நாட்டில் நடக்கும் கொடுமைகள் அதுவும் பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள் என்னை போன்ற சாதாரண பிரஜைகளை கலக்கமுறவும் மன ரீதியாக பாதிக்கவும் செய்கிறது ... என்னை சந்திக்கும் என்னை போன்ற பல பெற்றோர்கள்  அவ்வாறே கருதுகின்றனர்..   

இந்த சமயத்தில் எஸ் வி சேகர் பெண் பத்திரிகையாளர்களை பற்றிய செய்தியை பகிர்ந்ததும் பலரை முகம் சுழிக்க வைத்துள்ளது .. 

இந்த இடத்தில் இரு பிரமுகர்கள்  கமல் அவர்களும்,  மூத்த வழக்கறிஞர் சாந்தகுமாரி அவர்களும்கூறிய வார்த்தைகள் முக்கியமானதாக பட்டது .. 

''பெண்களை ஒழுக்கமாகவும் ஆடைகளை சரியாக உடுத்திக்கொள்ள சொல்லும் சமூகம் ஒரு ஆணை எப்படி வேண்டுமானாலும் இரு என்ன வேண்டுமானாலும் செய் என்பது எப்படி சம நீதி ஆகும் .. ''என்று கேட்டார்கள் 

ஒரு ஆண் பிள்ளையை ஒழுக்கமாக இரு.. பெண்களை மதிக்க கற்றுக்கொள் என்று ஏன் சொல்வதில்லை... ஆண்களை நெறிப்படுத்தவேண்டியது காலத்தின் கட்டாயம்.... இல்லையேல் சமூகம் கெட்டுவிடும் .....

சமூக சிந்தனையாளர்கள் ஜனநாயகவாதிகள் இந்த ஆண் சமூகத்தை நெறிப்படுத்த வேண்டிய காரியத்தை செய்யவேண்டிய தருணம் இது .....

சனி, 14 ஏப்ரல், 2018

மகளே மன்னித்துவிடு……




கைகள் நடுங்குகின்றது… இதை எழுதவே என்னால் முடியவில்லை..  இப்படியும் ஒரு அக்கிரமம் உண்டா… ? நடக்குமா…?

மனிதன் விலங்கைக் காட்டிலும் உயர்ந்தவன் என்று இனி எப்படிச் சொல்ல முடியும்…. எந்த விலங்கும், நாயோ பன்றியோ சிங்கமோகூட தன் இனத்தை இப்படிச் செய்யத் துணியாதே…..

மகளே அசிஃபா…. உன்னை இழந்து தவிக்கும் கோடான கோடி தந்தைகளின் சார்பில் எங்கள் கையறு நிலைகளின் சார்பில்  எங்களை மன்னித்துவிடு…

உன் தந்தை “ நான் எங்கும் தேடினேன்… ஆனால் கோவிலில் தேடவில்லை.. காரணம் அது புனிதமான இடம்…“ என்றார்….

அவர் கொடுத்த மரியாதை யாருக்கு… வெட்கித் தலைகுனிகிறோம்..

ஒரு நாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் சேதி வரும்
அப்போது மட்டும் நீ இந்த உலகில் மீண்டும் வா….
உன்னை பாதுகாப்போம்…

சனி, 31 மார்ச், 2018

A FEW GOOD MEN...

பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சனை தற்போது பிஜேபி தீர்த்துவிடும் என முதலமைச்சர் நம்பினார்...

 இன்னும் ஒரு நாள் காத்திருக்கலாம் என்றார்....

 கடைசி  குடிமகனுக்கும்  தெரியும் கர்நாடக தேர்தல் இன்னமும் முடியவில்லை என்று ....

இதில் எல்லா கட்சியும் ஒருவரையொருவர் சாடி கொள்வதும்  குற்றம் சாட்டுவதும் கேலி கூத்து ....இந்த பிரச்சனைக்கு  அனைத்து  தரப்பும் காரணம் ...

கர்நாடகத்தின்  அடாவடிக்கு எந்த நியாயமும்  தார்மிகமும்  இல்லை ...இருந்தும் தமிழர்கள் அமைதியாகத்தான் இருக்கிறார்கள் ...

மே மாதம் கர்நாடக தேர்தல் முடிந்து விடும்... காவேரி மேலாண்மை அமையுமா என்பதை நாட்டின் கொஞ்ச நஞ்ச நியாயஸ்தர்கள் ஜனநாயகவாதிகள் அவர்கள் எந்த மாநிலத்தில் எந்த உலகத்தில்  இருந்தாலும் குரல் தரட்டும் ...

செவ்வாய், 27 மார்ச், 2018

ஸ்டெர்லைட் ஆலை ....


ஸ்டெர்லைட் ஆலை இன்னொரு ஜல்லிக்கட்டு பிரச்சனையாகி விசுவரூபம் எடுத்துள்ளது பல நாட்கள் புகைந்து கொண்டிருந்த பிரச்சனைதான் …

ஜெ-யின் 91-96 ஆட்சிக்காலத்தில் பிள்ளையார் சுழி போடப்பட்டு தொடங்கப்பட்ட நிறுவனம் மக்கள் போராட்டத்தால் தடை பட்டு மீண்டும் கலைஞர் ஆட்சியில் பச்சைக் கொடி காட்டப்பட்டது

ஆலை சம்பந்தமாக தொடுக்கப்பட்ட வழக்குகளின் விளைவாக அந்த ஆலை 2013ம் ஆண்டில் மூடப்பட்டது. மூடப்படுவதற்கு முன்பாக பல விபத்துக்களும், உயிரிழப்புகளும், ஆலையிலிருந்து வெளியேறிய வாயுக்களால் ஏற்பட்ட மூச்சுத்திணறலும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடம் கோபத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியிருந்தது. நிலத்தடி நீர் பாதிக்கப்படுவது, மண் வளம் பாதிக்கப்படுவது, வளி மண்டலம் மாசுபடுவது, காற்றுவளி மண்டலத்தில் ஆலை தூசுக்கள் பரவி நிற்பது இதனால் அப்பகுதி மக்களுக்கு ஏற்படும் நோய், வாழ்வாதார பாதிப்பு, கால்நடைகள் இறந்து போவது கொடுமைகள் அரங்கேறியுள்ளது…

மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் மூடும் உத்தரவை ரத்து செய்தாலும், அந்த ஆலையின் பல்வேறு அத்துமீறல்களை சுட்டிக்காட்டி ரூபாய் 100 கோடி அபராதம் விதித்து அந்த ஆலையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய உத்தரவிட்டிருந்தது

இவ்வித ஆலைகள்  பொது மக்கள் வசிக்கும் இடத்திலிருந்து  குறைத்து  25 கிலோமீட்டர்கள் தூரம் இருக்கவேண்டும் என்கிற கட்டுப்பாடுகள் காற்றில் பறக்கவிட்டு 11 கிலோமீட்டர்கள் இன்னும் 10 கிலோமீட்டர்கள்  என்றுதான் உள்ளது என்பது நிரூபண மாகியுள்ளது…

வேலை வாய்ப்பை பாதிக்கிறது …..ஒவ்வொரு ஆலைகள் தொடங்கும்போது பிரச்சனை செய்தால் வளர்ச்சி என்பது எப்படி சாத்தியம் என்கிற கேள்விகள் சாதாரண கேள்விகள் என்று புறம் தள்ள முடியாததுதான் …….

ஆனால் இந்திய போன்ற ஊழல் மலிந்த நாடுகளில், கோடிகளில் புரளும் வேதாந்தா போன்ற பகாசுர நிறுவனங்கள் அதிகாரத்தையும் நீதியயையும் எதையும் விலைக்கு வாங்க முடியும் என்கிற போது,   மக்களின் இறுதி  கொழுக்கொம்பு என்பது போராட்டத்தை தவிர வேறு என்ன என்பதையும் அறிவார்ந்தவர்கள் ஜனநாயக வாதிகள் நியாயஸ்தர்கள் நினைத்து பார்க்க வேண்டும்…