வியாழன், 18 ஜூலை, 2013

எங்கே தவறு செய்கிறோம்...

பீகார் மாநிலத்தில் நேற்று (17.7.13) ஒரு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 22 குழந்தைகள் (அதற்கு மேலும் என்கிறது ஒரு செய்தி) பலியாகியிருக்கின்றனர். பொதுவாக சுகாதாரமற்ற உணவுகளால் குழந்தைகள் பாதிப்படைவதை அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கேட்டிருக்கிறோம் ஆனால் நேற்று நடந்த விஷ(ய)ம் மிக மிகக் கொடுமையானது.. என்ன மாதிரியான உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நினைக்கவே நடுக்கமாக இருக்கிறது.. இந்த பூமிப் பந்தில் எந்தப் பகுதியிலும் இதைப் போன்ற அயோக்கியத்தனத்தை கேட்டிருக்க முடியாது.. ஆமாம்.. அந்தக் குழந்தைகள் சாப்பிட்ட உணவில் ஏதோ பல்லியோ பாம்போ விழுந்திருக்கவில்லை (அதுவும் நேற்றே - ஒரு சம்பவம் பீகாரிலும் இன்னொன்று ராஜஸ்தானிலும் நடந்திருக்கிறது). 

அந்தக் குழந்தைகள் சாப்பிட்ட உணவில் organic phosphorous என்கிற விஷம் கலந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். அது ஒரு பூச்சிக் கொல்லி மருந்தாக பயன் படுத்துவதாகும்... அதெப்படி உணவில் அந்த விஷம் கலக்கப் பட்டிருக்கும். அதுவும் சாதாரண ஏதுமறியா ஏழைக் குழந்தைகள் சாப்பிடும் சாப்பாட்டில் விஷம்  இருக்க முடியும்..அவர்கள் ஏதாவது யாருக்காவது அரசியல் எதிரிகளா.. வியாபாரப் போட்டியில் கலந்து கொண்டவர்களா..  எந்தக் குற்றத்தில் ஈடுபட்டிருக்க முடியும் ? அதற்கு இப்படியொரு தண்டனை தர முடியுமா...? இப்படி ஒரு சம்பவத்தை கற்பனையில்கூட காண முடியாதே...சகிக்கவே முடியாத விஷயம்தான் நம் நாட்டில் நடக்குமா..  கொடிய விலங்கைக் கூட அடக்க அது சாப்பிடும் உணவில் மயக்க மருந்ததானே கலப்பார்கள்.. அய்யோ...  மனது ஆறவேயில்லை.. உத்தரகாண்டில் நடந்த பேரழிவை விட  இது மகா கொடுமையாக உள்ளதே...

எங்கே தவறு செய்கிறோம்...

கருத்துகள் இல்லை :