திங்கள், 20 மே, 2019

கருத்துக்கணிப்பு....

எல்லோரும் கருத்துக்கணிப்பு சொல்லிவிட்டார்கள்...
அடியேன் மட்டும் சொல்லாமல் விட விரும்பவில்லை ....

பல ஆண்டுகளாய் அரசியலை பார்த்து வருவதாலும், காய்தல் உவத்தல் இன்றி பேச வேண்டும் என்பதாலும்  , என் சிற்றறிவுக்கு எட்டிய வரை :-

பிஜேபி  200+ என்றும்
காங்கிரஸ் 150+என்றும்
கணிக்கிறேன்..

 இது சரி என்றால் அடியேன் சிறந்த கணிப்பளான் என்று எனக்கு நானே பட்டம் கொடுத்துக்கொள்கிறேன்...

 தவறென்றால் ....

அடியேன் இன்னும் அரசியலை ஆழ்ந்து பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொள்கிறேன் 

திங்கள், 6 மே, 2019

விஞ்ஞானத்தை வளர்க்கபோறேண்டி......

''விஞ்ஞானத்தை வளர்க்கபோறேண்டி....'' என்ற பாடல் வரிகள் கலைவாணர் காலத்தில் மிக பிரசித்தம் ..


நமது நாட்டில் எத்தனை ஊழல்கள் இருந்தாலும் எதேச்சிகாரம் சாதிய பாகுபாடு இருந்தாலும் விண்வெளி அறிவியலில் நாம் முன்னேறியிருப்பது சமீபத்திய FANI புயலின் ஆராய்ச்சியில்  துல்லியமாக கணித்தது வியப்புக்குரியது பாராட்டத்தக்கது 


ஒரிஸ்ஸாவை தாக்கிய இந்த கோரப்புயலில்  நமது வானிலை மையம் முன்னறிந்து சொல்ல விட்டால் எப்படியும் பல் ஆயிரக்கானவர்கள் காணாமல் போயிருப்பார்கள் ...


வானிலை மையம்,  விண்வெளி ஆராச்சியாளர்கள், ஒரிசா அரசும் CONCERTED ACTION மூலம் பல உயிர் இழப்பை தடுத்து நிறுத்தி உள்ளது..  உண்மையில் பாராட்டுக்குரியது..


 விஞ்ஞானத்தை வளர்க்கவேண்டியது அனைவரின் கடமை என்பது நிதர்சன உண்மை 

வியாழன், 2 மே, 2019

பொன்பரப்பி ..

பொன்பரப்பி கொடுமைகளை பற்றி என்ன சொல்ல....

 நாகரீக சமூகத்தை வளர விடாமல் செய்யும் ஒரு தடைக்கல் ....
எந்த வைகையிலும் ஜீரணிக்க முடியாத வன்முறை ....

ஆனால் கண்ணுக்கு கண் என்ற பார்வையில் பார்க்கக்கூடாது ...

''அவர்களை ஜனநாயகப்படுத்தி வெல்லவேண்டும்....'' என்று  தொல் திருமாவின் மொழியில் கேட்டபோது -  காந்தி வாழ்கிறார் என்றே தோன்றுகிறது ..

வாழ்க திருமா ....

வெள்ளி, 15 மார்ச், 2019

பெண்ணாய்ப் பிறப்பது பாவமா?

பொள்ளாச்சி விவகாரம் அனைத்து ஊடங்கள் அரசியல் கட்சிகள் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்வும் கவலையும் தந்துள்ளது.

இவற்றில் வரும் பல வாதப் பிரதிவாதங்களில் என் இதயத்தை வலிக்கச் செய்யும் வாதம் " இந்த பொம்பள புள்ளைங்க ஒழுங்கு      மரியாதயா அடக்கமா இருக்க மாட்டங்கறாங்க .. " என்னும் வாதம் தான்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது அத்தனை தவறல்ல என தோற்றமளிக்கும் இந்தக் கூற்றில்  படுமோசமான ஆணாதிக்க வெறி பொதிந்துள்ளது.  ஆணுக்கு அனைத்து உரிமை - அவளை அனுபவிக்கும் உரிமையையும் சேர்த்துத் தரும் கிரிமினல் வெறி பொதிந்துள்ளது.  இதைத் தான் U.P முலயாம் boys are boys என்கிறார்.

இந்த வாதத்தைத் தகர்க்காமல் சமத்துவம் சாத்தியமில்லை.

இது தான் இந்நாட்டு நியதி என்றால் பெண்ணாகப் பிறப்பதே ஒரு பாவம்

வியாழன், 28 பிப்ரவரி, 2019

அமைதிக்கு ஒரு வாய்ப்பு தரலாம்..

இரு நாடுகளின் இடையே போர்ப் பதட்டம் மிக மிகக் கவலையளிக்கிறது.  போர் நடந்தால் இந்தியா வெற்றி பெறும்தான் . ஆனால் அதற்கான விலை .?

 இந்நேரத்தில் இம்ரான்கானின் நல்லெண்ண நடவடிக்கையை பாராட்டுவோம். எல்லாவற்றுக்கும் அரசியல் காரணம் இருக்கத்தான் செய்யும்.  நமக்கு இல்லையென சொல்ல இயலுமா ?

முகமெங்கும் ரத்தம் தோய்ந்த அந்த படைவீரனை காணும் போது நெஞ்சு விம்முகிறது

. ஆனால் முதல் குரலாக ஒலித்த அந்த மனிதனுடன் கைகுலுக்குவோம்.
தீவிரவாதம் பாக் மக்களுக்கும் எதிரானது என்பதை பேச்சு வார்த்தை மூலம் உணர்த்துவோம்.

புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்

வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

கிரெளஞ்ச வதம்..

எனக்குத் தெரிந்த இரு உறவினர்கள் புற்றுநோய்க்கு ஆட்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். அருகிலிருந்து அந்நோயின் கொடுமையை  அவ்விருவர் அவதிப்படுவதைப் பார்த்து வந்தேன்..

நமது சினிமாவில் காட்டப்பட்டதைப் போல இல்லை இந்நோய்.
வேறு வகைப்பட்டது.  குரூரமானது. இரக்கமற்றது.  மரண தண்டனையை விடக் கொடுமையானது என்பதே      நான் அறிந்து கொண்ட உண்மை.

புராணக் கதைகளில் வருகின்ற சபிக்கப்பட்டவர்களைப் போல பாதிக்கப்பட்டோரை மரணபயம் காட்டி அவர்கள் கம்பீரத்தைக் காலி செய்து பின்னர் காய்ந்த சருகுகளைப் போல் அடித்து துவம்சம் செய்து கதையை முடிக்கும் அவலத்தை பார்ப்பதே ஒரு கொடுமை.

இவற்றைப் பார்க்க நேரும்போது கடவுள் உண்டா இல்லையா என சந்தேகம் வருகிறது என பாதிக்கப்பட்டவர்கள் அரற்றும் போது யாரிடமும் அதற்கு பதிலில்லை.

கீமோதெரபி தான் இதற்கான மருந்து என்கிறார்கள். அதே சமயம் அந்த மருந்துதான்  நோயாளியை உருக்குலைக்க வைக்கிறது என்கிறார்கள்.

எது எப்படியோ இதற்கான சரியான மருந்தை கண்டுபிடிப்பவர் உண்மையில் அந்தக் கடவுளர்களை விட மேலானவர்.

எனது இரண்டு உறவினர்கள் பெருங்கொடுமையை அனுபவித்து உயிர் துறந்ததைப் பார்க்கும் போது அவர்கள் செய்த எந்தக் குற்றத்திற்கு இந்த தண்டனை என நினைக்கத் தோன்றுகிறது ...

இது இயற்கையின் ஒரு கிரெளஞ்சவதமில்லாது வேறு   என்ன...?

வெள்ளி, 21 டிசம்பர், 2018

பிரபஞ்சன் அஞ்சலி...


Image result for பிரபஞ்சன்

பிரபஞ்ஜனின் பல சிறுகதைகள் மானுடம் வெல்லும் போன்ற படைப்புக்களை வியந்திருக்கிறேன் .. எல்லாவற்றையும் விட , அவரின் சிறுகதை ஒன்று (பெயர் தெரியவில்லை) ஒரு கிளி ஜோசிய கிழவன் நாள் முழுவதும் போனியாகாமல் இருக்கும் பொது ஒரேயொரு வாழைப்பழம் கிடைக்கிறது . அன்று முழுவதும் கொலை பட்டினி    யாசகத்திற்கு   விருப்பமில்லை ..தனக்கு கிடைத்த வாழைப்பழத்தையும் அந்த கிளிக்கு கொடுத்துவிட்டு பட்டினியோடு படுத்துறங்குவான் என முடித்திருப்பார்.. படித்து முடித்தவுடன் என்னால் என் கண்ணீரை அடக்கவே முடியவில்லை.

இதை பற்றி  ஒரு கூட்டத்தில் சந்தித்தபோது சொல்ல நினைத்தேன்.. அவரிடம் பேசும்போது தொண்டை அடைத்துக்கொண்டது  என்னால் சொல்லவே முடியவில்லை..

 நண்பர் என்னை அறிமுகம் செய்ய கை கொடுத்துவிட்டு அகன்றார்..


.மறக்கமுடியாத படைப்பாளி ..

அன்னாருக்கு அஞ்சலி